Thalapathy Vijay: கேரளாவில் தனது ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


விஜய் வெளியிட்ட வீடியோ:


கேரளாவில், தனது நடிப்பில் உருவாகி வரும் தி கோட் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார். அப்போது, அங்கு குவிந்த ரசிகர்களை சந்தித்தார். வாகனத்தின் மீது நின்றவாறு ரசிகர்களுடன் சேர்ந்து வீடியோ எடுத்துக்கொண்டார். அதனை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “எனது அண்ணன்கள், அக்காக்கள், தம்பிகள், தங்கைகள் மற்றும் அம்மாக்கள் என எல்லா மலையாளிகளுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றிகள்” என நடிகர் விஜய் மலையாளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று விஜய சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.









 


கேரளாவில் குவியும் ரசிகர்கள்:


நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு தமிழகத்தை போன்று, கேரளாவிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் நடைபெறும் தனது படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க கேரளா சென்றுள்ளார். இதுதொடர்பான தகவல் வெளியானதில் இருந்தே, விஜயை காண அவரது ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் குவிந்து வருகின்றனர். விஜய் சென்ற காரை சுற்றி ஏராளமான ரசிகர்கள் குவிந்ததில், அந்த கார் கடும் சேதமடைந்தது. அதைதொடர்ந்து, தனது ரசிகர்களை சந்தித்தது மற்றும் சிறுமிக்கு முத்தமிட்டது போன்ற வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. நாளுக்குள் நாள் விஜயை காண, படப்பிடிப்பு தளத்தில் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தான், தனது கேரளா ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் வெளியிட்டுள்ளார்.






தி கோட் படப்பிடிப்பு:


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வரும் தி கோட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ள இப்படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கேரளாவில் படப்பிடிப்பு முடிந்ததுமே தி கோட் படக்குழு, இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்ல இருக்கிறது. அங்கு  படப்பிடிப்பு முடிந்ததுமே, நடப்பாண்டில் இரண்டாம் பாதியில் படத்தை திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. அரசியல் நுழைவு தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு, விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் என்பதால், தி கோட் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.