நடிகர் விஜய் நடிப்பில் சூப்பர்ஹிட்டான சிவகாசி படம் வெளியாகி இன்றோடு 18 ஆண்டுகள் நிறைவடைவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


பேரரசுவுடன் இணைந்த விஜய் 


இயக்குநர் பேரரசு விஜய் நடித்த திருப்பாச்சி படம் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த கூட்டணி 2வது முறையாக இணைந்தது. அந்த படம் தான் “சிவகாசி”. இந்த படத்தில் அசின், பிரகாஷ்ராஜ், கீதா, இயக்குநர் வெங்கட்பிரபு, எம்.எஸ்.பாஸ்கர், தேவன், வையாபுரி, நடிகை சகுந்தலா என பலரும் நடித்திருந்தனர். ஸ்ரீகாந்த் தேவா இப்படத்துக்கு இசையமைத்தார். 


படத்தின் கதை 


சென்னையில் வெல்டராக இருக்கும் சிவகாசிக்கும் (விஜய்), மிகப்பெரிய தொழிலதிபரின் மகளான ஹேமாவுக்கும் (அசின்) முதல் சந்திப்பானது மோதலில் தொடங்கி பின் காதலில் முடிகிறது. சிவகாசியின் பொருளாதார நிலையில் தங்கள் குடும்பத்திற்கு ஏற்றதாக இல்லை என ஹேமாவின் சகோதரர்கள் கூற, பிரச்சினை வெடிக்கிறது. இதில் அண்ணன்கள் இருவரையும் சிவகாசி அடிக்கிறான். இதனால் கோபமாகும் ஹேமா, எந்த உறவும் இல்லாமல் வாழ்வதால் தான் தன் சகோதரர்கள் சொன்னதை புரிந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கிறாள். ஆனால் தனக்கு ஒரு குடும்பம் இருப்பதாகவும், சிறு வயதில் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஊரை விட்டு ஓடி வந்து விட்டதாகவும் சிவகாசி கூறுகிறான். குடும்பத்தோடு வந்து பெண் கேட்டால் திருமணம் நடக்கும் என சொல்லிவிட்டு ஹேமா செல்கிறாள். 


இதனைத் தொடர்ந்து குடும்பத்தை தேடி போகும் சிவகாசிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அங்கு தனது அண்ணன் உடையப்பன் (பிரகாஷ்ராஜ்) சொத்தையெல்லாம் பறித்துக் கொண்டு தாயை கவனிக்காமல் இருக்கிறான். மறுபுறம் அண்ணன் அவமானப்படுத்தியதால் வாழ்க்கையில் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட தங்கை என அகங்காரம் கொண்டவனாக இருக்கிறான். இதனால் வெகுண்டெழும் சிவகாசி தன் அண்ணனிடம் இருந்து சொத்துகளை பறித்து தன் அம்மா மற்றும் தங்கையை  மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதே இப்படத்தின் கதையாகும். 


கண் கலங்க வைத்த செண்டிமெண்ட் காட்சிகள் 


திருப்பாச்சி படத்தில் தங்கை பாசம் தொடர்பான காட்சிகள் வைத்து எப்படி இயக்குநர் பேரரசு - நடிகர் விஜய் கூட்டணி ஜெயித்ததோ, இதில் தாய் - தங்கை பாசத்தை வைத்து வெற்றி பெற்றார்கள். அம்மாவாக கீதாவும், தங்கையாக லக்‌ஷனாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். தூள் பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகளும் படத்தை தாங்கி பிடித்தன. அசின் விஜய்யுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்தார். 


ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தன. சிவகாசி படத்துக்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். டிவியில் இப்படம் எப்போது ஒளிபரப்பானாலும் டிஆர்பி எகிறும். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு அன்றைய நாளில் முன்னணி நடிகையாக தனது கேரியரை தொடங்கிய நயன்தாரா ஆடியிருப்பார். இப்படத்துக்கு பின்னணி இசையமைத்தவர் இசையமைப்பாளர் தேவா என்பது பலரும் அறியாத தகவல். இப்படி பல சிறப்பு கொண்ட “சிவகாசி” படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்தது.