நடிகர் விஜய்யின் ஆரம்ப கால சினிமா கேரியரில் மிக முக்கிய படமாக அமைந்த “ப்ரியமானவளே” வெளியாகி இன்றோடு 23 ஆண்டுகள் நிறைவடைகிறது.
செல்வபாரதியுடன் இரண்டாவது முறையாக கூட்டணி
1998 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான நினைத்தேன் வந்தாய் படத்தை இயக்கியிருந்தார் செல்வ பாரதி. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைந்த படம் தான் “ப்ரியமானவளே” . இப்படத்தில் சிம்ரன் ஹீரோயினாக நடித்திருப்பார். மேலும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், விவேக், தலைவாசல் விஜய், ராம்ஜி, கசான் கான் என பலரும் நடித்திருந்தனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
பணக்கார தொழிலதிபரான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் ஒரே மகன் விஜய். வெளிநாட்டில் படிப்பை முடித்து விட்டு அவருக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார். ஆனால் விஜய்யோ இந்திய கலாச்சாரம் பற்றி அறியாதவர். அதனால் தான் திருமணம் செய்துக் கொள்ளும் பெண்ணோடு ஒரு வருடம் மட்டுமே வாழ்வேன், பிடித்தால் அந்த உறவை தொடர்கிறேன் என விபரீத கண்டிஷனை வைக்கிறார்.
இதற்கிடையில் எஸ்.பி.பி., அலுவலகத்தில் வேலை செய்யும் சிம்ரன், குடும்பத்தில் நிலவும் பிரச்சினை காரணமாக விஜய்யின் கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டு திருமணம் செய்கிறார். என்னதான் விஜய்க்கு பிடிக்கும் வகையில் பார்த்து பார்த்து செய்தாலும் ஓராண்டு முடியும் நிலையில் சிம்ரனை மனைவியாக ஏற்றுக்கொள்ள முடியாமல் பிறந்த வீட்டுக்கே அனுப்புகிறார். பின் அவரது வாழ்வில் நடைபெறும் சம்பவம் தவறை உணர வைக்கிறது. மன்னிப்பு கேட்டு சிம்ரன் வீட்டுக்கு வரும் அவர், அவமானப்படுத்தப்பட்டு அனுப்பப்படுகிறார். இம்முறை விஜய் தன்னை சிம்ரன் பிடிக்க வைக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறார். இருவரும் இணைந்தார்களா, அன்பான கணவராக விஜய் மாறினாரா என்பதே இப்படத்தின் கதையாகும்.
கண் கலங்க வைக்கும் கிளைமேக்ஸ்
ப்ரியமானவளே படம் ரசிகர்களை கவர மிகப்பெரிய காரணம் கிளைமேக்ஸ் காட்சி தான். அந்த அளவுக்கு தத்ரூபமாக படமாக்கப்பட்டிருக்கும். ஒரு பக்கம் கத்திக்குத்து காயத்துடன் உயிருக்கு போராடும் விஜய், மறுபக்கம் நிறைமாத கர்ப்பிணியான சிம்ரன் வயிற்றில் அடிபட்டு துடிதுடிக்கும் காட்சி இப்போது பார்த்தாலும் பதைபதைப்பை ஏற்படுத்தும்
மேலும் இந்த படம் விஜய்க்கு ரொம்ப ஸ்பெஷலான படமாகும். இப்படம் உருவான சமயத்தில் தான் விஜய் மகனாக ஜேசன் சஞ்சய் பிறந்திருந்தார். அதற்கேற்றவாறு “ஜூன் ஜூலை மாதத்தில்” என கர்ப்பமான சிம்ரனை விஜய் கொண்டாடும் பாடல் இடம் பெற்றிருந்தது.
ரசிக்க வைத்த பாடல்கள்
இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார் பற்றி சொல்லவா வேண்டும். மனதை வருடும் பாடல்களையும், பின்னணி இசையையும் கொடுத்து ரசிகர்களை கட்டிப்போட்டு விட்டார். வெல்கம் பாய்ஸ் வெல்கம் கேர்ள்ஸ், என்னவோ என்னவோ, எனக்கொரு சிநேகிதி, ஜூன் ஜூலை மாதத்தில் என வெரைட்டியாக பாடல்களை கொடுத்தார். ப்ரியமானவளே படம் 1996 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பவித்ரா பந்தம் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் வணிகம் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.