தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். கட்சியைத் தொடங்கிய விஜய் ஏற்கனவே ஒப்புக்கொண்ட இரண்டு படங்களுக்கு பிறகு நடிப்பில் இருந்து முழுவதும் விலகுவதாக அறிவித்தார்.
தளபதி 69:
நடிகர் விஜய்யின் அரசியல் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், அவர் சினிமாவில் இருந்து விலகுவது ரசிகர்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியது. அவரது கோட் படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான நிலையில், அவரது கடைசி படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ளார்.
அரசியல் த்ரில்லர் படமாக உருவாக உள்ள இந்த படத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை. தளபதி 69 என்று அழைக்கப்படும் இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க மமைதா பாஜூ முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
விஜய்யின் கடைசி படத்தில் சூப்பர்ஸ்டார்:
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவராஜ்குமார் கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டாராக திகழ்கிறார். கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டாராக கொடிகட்டிப் பறந்த மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனும், மறைந்த கன்னட திரையுலகின் பிரபல நடிகர் புனித் ராஜ்குமாரின் அண்ணனும் இவர் ஆவார்.
கடந்தாண்டு வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் முக்கிய வேடத்தில் சிவராஜ்குமார் நடித்திருப்பார். இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதன்பின்பு, தமிழில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது. கேப்டன் மில்லர் படத்தில் தனுஷூடன் இணைந்து நடித்திருந்தார். இந்த நிலையில், தற்போது விஜய்யின் படத்தில் அவர் நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு:
சமீபகாலமாக தமிழ் படங்களில் மற்ற திரையுலகங்களின் முன்னணி நாயகர்கள் முக்கிய வேடத்திலும், வில்லனாகவும் நடிப்பதால் தமிழ் திரையுலகின் வர்த்தகம் மற்ற திரையுலகங்களிலும் நன்றாக நடைபெறுவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை பிரபல கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
விஜய் நடிக்கும் இந்த படம் அடுத்தாண்டு தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் என்பதாலும், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு வரும் படம் என்பதாலும் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.