பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' படம் உலகளவில் சக்கை போடு போட்டு வருகிறது. வெளியான ஒரே நாளில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த ஹாட் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜுக்கு விருது:
வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் எந்த அளவிற்கு ஆர்வமாக காத்து இருந்தார்களோ அதே போல 'தளபதி 67 ' படத்தின் அப்டேட் பற்றியும் வெளியிடுவதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜும் மிகவும் ஆவலாக காத்திருந்தார். அந்த வகையில் தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு கோவை துடியலூர் பகுதியில் நடைபெற்ற இளம் தொழிலதிபர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜுக்கும் விருது வழங்கி பாராட்டினர்.
லோகேஷ் கொடுத்த இன்ப அதிர்ச்சி :
விழாவில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்களை சந்திப்பு பேசிய போது " வாரிசு படம் வெளியாவதால் தளபதி 67 திரைப்படத்தை பற்றிய தகவல்கள் எதையும் வெளியிடாமல் இருந்தோம். தற்போது வாரிசு படம் வெளியாகிவிட்டதால் இனி தளபதி 67 திரைப்படம் குறித்த அப்டேட் இனி ஒவ்வொன்றாக வெளியாகும். அடுத்த 10 நாட்களில் அதை எதிர்பார்க்கலாம்" என்றார். தீபாவளிக்கு படம் ரிலீசாகுமா என கேட்டதற்கு " படப்பிடிப்பு தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது. ரிலீஸ் குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை" என்றார் லோகேஷ் கனகராஜ்.
ரசிகர்கள் குதூகலம் :
தற்காலிகமாக தளபதி 67 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைகிறார் நடிகை த்ரிஷா. 'வாரிசு' திரைப்படத்தின் ரிலீஸ் குஷியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கும் விஜய் ரசிகர்களுக்கு தளபதி 67 பற்றிய தகவல் டபுள் போனஸ் சந்தோஷத்தை கொடுத்துள்ளது. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
குடும்ப சென்டிமென்ட் கதையை மையமாக வைத்து வெளியான 'வாரிசு' திரைப்படத்தை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பையும் வசூலையும் முதல் நாளே குவித்துள்ள இப்படம் உலகளவிலும் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது.