லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ள 67வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி “வாரிசு” படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில், வசூலில் ரூ.250 கோடிக்கும் பெற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்ததால் பேமிலி ஆடியன்ஸ் மற்றும் குழந்தைகளை கவர்ந்த வாரிசு படம், விஜய் ரசிகர்களை சற்றே ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. 


இதனிடையே தற்போது விஜய் ரசிகர்களின் பார்வை எல்லாம் அவரின் 67 படத்தை நோக்கி மட்டுமே உள்ளது.  கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான மாஸ்டர் படத்திற்குப் பின் மீண்டும் நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்- தயாரிப்பாளர் லலித் குமார் ஆகியோர் 2வது  முறையாக கூட்டணி அமைக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், மன்சூர் அலிகான் அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். இதனால் படம் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எழுந்துள்ளது.   






இந்த படம் லோகேஷ் கனகராஜின் "LCU"வின்  படியே உருவாகும் என கூறப்படுவதால் அவரின் முந்தைய படங்களான கைதி, விக்ரம் படத்தில் இடம் பெற்ற டில்லி, ரோலக்ஸ் கேரக்டர்கள், “விஜய் 67” படத்தில் இடம் பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே பிப்ரவரி 1 முதல் 3 ஆம் தேதிக்குள் விஜய் 67 படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகலாம் என கூறப்பட்டது. முன்னதாக ப்ரோமோவை பார்த்த  மாநகரம் புகழ் சந்தீப் கிஷன் இருவரும், வீடியோ சூப்பராக வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 


இந்நிலையில் “விஜய் 67” படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. முன்னதாக படத்தின் அப்டேட் இன்று மாலை 6.07 மணிக்கு வெளியாகவுள்ளதாக கூறி அதில் 67 புள்ளிகள் வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் தற்போது வெளியாகியுள்ள அப்டேட்டில், படத்தின் பணியாற்றவுள்ள டெக்னிக்கல் குழு பற்றிய அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.


அதன்படி ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ், கலை இயக்குநராக சதீஷ் குமார், நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டர், வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.