நடிகர் விஜய் நடிக்கவுள்ள 67வது படத்தின் நடிக்கவுள்ள நடிகர்கள் பட்டியல் வெளியாக தொடங்கியுள்ளது. முதலாவதாக நடிகர் சஞ்சய் தத் இப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி
கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது. இப்படத்தின் மூலம் முதல்முறையாக விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி சேர்ந்தார். இந்த படத்தை . செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் இப்படத்தை தயாரித்திருந்தார். கொரோனா காலத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று திரையுலகினருக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது.
இந்நிலையில் தான் தளபதி 67 படத்தின் மூலம் விஜய்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளனர் என்றும், அனிருத் இசையமைக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்கிறார் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. மேலும் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ், கலை இயக்குநராக சதீஷ் குமார், நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டர், வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் பணியாற்றவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக த்ரிஷா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும், மன்சூர் அலிகான் அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதை சம்பந்தப்பட்ட தரப்பும் கிட்டதட்ட உறுதி செய்தது.
வைரலான வீடியோ
தளபதி 67 படத்தின் ஷூட்டிங் நாளை காஷ்மீரில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் காஷ்மீருக்கு தனி விமானம் மூலம் சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் ஆகியோர் உள்ளனர்.
மாஸாக வெளியான “தளபதி 67” அப்டேட்
இந்நிலையில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த விவரங்களை படக்குழு வெளியிட தொடங்கியுள்ளது. அதன்படி இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சஞ்சய் தத் தெரிவித்ததாக செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “எப்போது நான் தளபதி 67 படத்தின் ஒன்லைன் கதையை கேட்டேனோ, அப்போதே நான் இந்த படத்தில் இருப்பேன் என்று எனக்குத் தெரியும். மேலும் இந்த பயணத்தைத் தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.