தளபதி 67 படத்தில் விஜய்யுடன் முதல்முறையாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கவுள்ளது பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. 


விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி 


கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது. இப்படத்தின் மூலம் முதல்முறையாக விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி சேர்ந்தார். இந்த படத்தை . செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் இப்படத்தை தயாரித்திருந்தார்.  கொரோனா காலத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று திரையுலகினருக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. 


இந்நிலையில் தான் தளபதி 67 படத்தின் மூலம்  விஜய்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளனர் என்றும்,  அனிருத் இசையமைக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார்  தயாரிக்கிறார் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. மேலும் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ், கலை இயக்குநராக சதீஷ் குமார், நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டர், வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் பணியாற்றவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வைரலான வீடியோ 


தளபதி 67 படத்தின் ஷூட்டிங் நாளை காஷ்மீரில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் காஷ்மீருக்கு தனி விமானம் மூலம் சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் ஆகியோர் உள்ளனர்.


அடுத்தடுத்து வெளியாகும் “தளபதி 67” அப்டேட்


இதற்கிடையில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த விவரங்களை படக்குழு வெளியிட தொடங்கியுள்ளது. அதன்படி பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இயக்குநர் மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான், மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனனும் இந்த படத்தில் இணைந்துள்ளார். 






மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான கௌதம் மேனன், தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், வெந்து தணிந்தது காடு என பல படங்களை இயக்கியுள்ளார்.


பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த அவர், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் மோஸ்ட் வாண்டட் நடிகராக உயர்ந்தார். அதேசமயம் விஜய்யை வைத்து கௌதன் “யோஹன் அத்தியாயம் ஒன்று” என்ற படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது  குறிப்பிடத்தக்கது.