லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 திரைப்படத்திற்கான டைட்டில் டீசர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.


சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், ஷிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்டவர்கள் நடித்தனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்த நிலையில், ரூ.600 கோடிகளுக்கு மேலாக வசூல் செய்தது.


இதனால் மகிழ்ச்சி அடைந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிருத் ஆகிய மூவருக்கும் சொகுசு கார் பரிசளித்ததுடன், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தங்க நாணையமும் பரிசாக வழங்கியது. தொடர்ந்து அடுத்தக் கட்டமாக தனது அடுத்த படம் குறித்தான அறிவிப்பையும் அறிவித்தது.


தலைவர் 171


ரஜினிகாந்தின் 171-வது படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நிலையில், அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க ,லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும், தீபாவளி அன்று இந்தப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் ரசிகர்கள் ஆர்வமடைந்துள்ளனர்.


டைட்டில் டீசர்


பொதுவாகவே தனது படங்களின் டைட்டிலை தனியாக ஒரு குட்டிப் படமாக வெளியிடுபவர் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் விக்ரம் மற்றும் லியோ படத்தின் டைட்டில் வீடியோ ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றன. தற்போது ரஜினிகாந்த் படத்தின் டைட்டிலையும் அதே மாதிரியான ஒரு வீடியோவாக லோகேஷ் கனகராஜ் வெளியிடுவார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.


இத்தகைய சூழலில் லியோ படத்தின் வேலைகளை ஒருபக்கம் கவனித்துக் கொண்டே ரஜினிகாந்தை வைத்து படத்திற்கான டைட்டில் வீடியோவை வெறும் மூன்றே நாட்களில் லோகேஷ் கனகராஜ் படம் பிடித்துள்ளதாகத் தகவல்கள் கூறப்படுகின்றன. மேலும் இந்த வீடியோவை அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகவும் எதிர்பார்க்கப் படுகிறது.


லோகேஷ் கனகராஜின் தேவைகளை நிறைவேற்றித் தரும் வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஒரு தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஜெயிலர் படத்தின் சாதனையை ரஜினிகாந்தின் 171ஆவது படத்தைக் கொண்டு முறியடிக்க அத்தனை முயற்சிகளையும் எடுத்து வருகிறது சன் பிக்சர்ஸ். நிறுவனம்.


தலைவர் 170


தற்சமயம் ரஜினிகாந்த் தனது தலைவர்170 படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இந்தப் படத்தை இயக்க, அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கிய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.


லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு மொத்தம் 40 நாட்கள் ரஜினிகாந்த கால்ஷீட் வழங்கியிருப்பதாகவும் தனது படப்பிடிப்பை முடித்த வேகத்தில், லோகேஷ் கனகராஜூடன் அவர் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.