"கருப்பான கையால என்ன புடிச்சான்..." இந்தப் பாடலை ஞாபகம் இருக்கா.. அப்ப நிச்சயம் பானுவையும் ஞாபகம் இருக்கும். தாமிரபரணி திரைப்படத்தில் நடிகர் விஷாலின் அத்தை மகளாக பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தான் முக்தா ஜார்ஜ். அனைவராலும் பானு என்றே அறியப்படும் முக்தாவின் 32வது பிறந்தநாள் இன்று.
தமிழில் நடித்த படங்கள் :
'தாமிரபரணி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான முக்தா ஜார்ஜ் ஒரு சில தமிழ் படங்களில் நடித்து இருந்தாலும் ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த பானு, பெரிய அளவில் தமிழ் சினிமாவில் மிளிர முடியவில்லை. 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில் நடிகர் சந்தானத்தின் மனைவியாக நடித்திருந்தார். மேலும் அழகர்மலை, மூன்றுபேர் மூன்று காதல், ரசிகர் மன்றம், பாம்பு சட்டை, புதுமுகங்கள் தேவை, சட்டப்படி குற்றம், தேசிங்கு ராஜா, சகுந்தலாவின் காதலன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் சினிமாவில் அவரால் பெரிய அளவில் ஜெயிக்க முடியவில்லை.
காணாமல் போன பானு :
2005ம் ஆண்டு மலையாள திரைப்படத்தின் மூலம் பானு திரைத்துறைக்கு அறிமுகமானார். குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன், கிளாமர் ரோலில் நடிக்க மாட்டேன் என அவர் சொன்னது தான் பட வாய்ப்புகள் அமையாமல் போனதற்கு காரணம் எனக் கூறப்பட்டது. பின்னர் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக, போட்டியாளராக என கலந்து கொண்டார்.
பானுவின் மகள் :
தன்னுடைய திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய பானு ஒரு சிறப்பான குடும்பத் தலைவியாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் பானு, 2016ம் ஆண்டு பானுவிற்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. தன்னால் ஜெயிக்க முடியாத பானு தன்னுடைய பாதையிலேயே மகள் கியாராவை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார்.
மம்மூட்டி நடிப்பில் வெளியான 'மாமாங்கம்' என்ற வரலாற்று திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பானுவின் மகள் கியாரா. இதை பானுவே தன்னுடைய சோசியல் மீடியா மூலம் தெரிவித்து இருந்தார். மீண்டும் தாமிரபரணி பானுவை போல நடிப்புக்கு அவர் கம் பேக் கொடுக்க வேண்டும் என்பது தான் அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.