தமிழில் உள்ள தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டி.வி. இந்த டி.வி.யில் வாரம் ஒருமுறை ஒளிபரப்படும் நிகழ்ச்சி நீயா நானா. இந்த நிகழ்ச்சியில் வார வாரம் ஞாயிற்றுக் கிழமை ஒவ்வொரு தலைப்பினை மைய்யமாகக் கொண்டு உரையாடப்படும். நீயா நானா நிகழ்ச்சிக்கு என தமிழ்நாடு முழுவதும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் தொடங்கி குடும்ப உறவுகளுக்கு இடையிலான சிக்கல்கள் வரை பலதரப்பட்ட தலைப்புகள் இந்த நிகழ்ச்சியில் உரையாடப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சியை தமிழ்நாட்டின் முன்னணி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவரான கோபிநாத், இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து நீயா நானாவை தொகுத்து வழங்கி வருகின்றார். இவருக்காகவும் இவர் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதத்திற்காகவும் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் பலர்.
இப்படி புகழ் பெற்ற நிகழ்ச்சியான நீயா நானாவில், வரும் வாரம் தமிழ்நாட்டில் பக்திப் பாடல்கள் பாடும் பாடகர்களும் ரசிகர்களைக் கொண்டும் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு விஜய் டி.வி. தரப்பில் இருந்து ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றனர். இந்த ப்ரோமோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இஸ்லாமிய பெண் ஒருவர், “கொலு வைக்கும் போது பாடும் பாடல்களைப் பாடியும், முழுக்க முழுக்க காவி உடை அணிந்து கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்துள்ள ஆண் ஒருவர், ’அல்லா.. அல்லா.. நீ இல்லாத உலகே இல்லை’ என்ற பாடலைப் பாடியுள்ளார். இந்த ப்ரோமோ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு இணையவாசிகள் பலர் தங்களது கருத்துக்களை கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.
அதில், ”ருத்ராட்ச மாலை அணிந்தவர் அல்லா அல்லா பாடுகின்றார், புர்கா அணிந்த பெண் குன்றத்திலே குமரனுக்கு பாடுகின்றார். இதுதான் தமிழ்நாடு” என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மற்றொருவர், ”மக்கள் அனைவரும் மதங்களைக் கடந்து ஒற்றுமையாகத்தான் உள்ளனர். நடுவில் சிலர் தங்களுடைய ஆதாயத்திற்காக அரசியல் செய்கின்றார்கள் என கமெண்ட் செய்துள்ளார். அதேபோல் ஒருவர், மதங்களைக் கடந்த மனிதர்கள்தான் கடவுளின் பிள்ளைகள்’ எனவும், மற்றொருவர், ’அருமை அருமை இவற்றைக் காண பெருமிதம் கொள்கின்றது மனசு. வாழ்த்துகள் நீயா நானா குழுமத்திற்கு’ எனவும் கமெண்ட் செய்துள்ளார்.
அதேபோல் மற்றொரு இணையவாசி ஒருவர் ஆங்கிலத்தில், “இந்த ஒற்றுமை இருப்பதால்தான் தமிழ்நாட்டில் மதத்தினை வைத்து நடத்தப்படும் அரசியல் எடுபடுவதில்லை. அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள இந்த எண்ணம் இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கும் பரப்பப்படவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு சில இணையவாசிகள் நீயா நானா நிகழ்ச்சியினை முழுக்க முழுக்க ஆங்கில சப்-டைட்டிலுடன் ஒளிபரப்பினால் தென் இந்தியாவிலும் ஒட்டுமொத்த இந்தியவிலும் இந்த நிகழ்ச்சிக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் மக்களுக்கு பயன்பெரும் கருத்துக்கள் எளிதில் சென்றடையும் எனவும் தெரிவித்துள்ளனர்.