விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் முதல் ரியாலிட்டி ஷோ வரை அனைத்திற்குமே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி என்றால் அது 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சி தான்.


இதுவரையில் கேள்விப்படாத அளவுக்கு சர்வதேச அளவில் சமைக்கும் குக்குகளும், அவர்களுக்கு இடையூறு செய்வதையே வேலையாக வைத்து கலாட்டா செய்து ஒட்டுமொத்த செட் மட்டுமின்றி பார்வையாளர்களையும் வயிறு குலுங்க  சிரிக்க வைக்கும் கோமாளிகளும் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட். மேலும் இந்த நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்கும் நடுவர்கள். இதுவே குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்கு முக்கியமான காரணம். 


 


 



கடந்த நான்கு சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. வழக்கமாக ஒவ்வொரு சீசனும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தொடங்கும். ஆனால் இந்த முறை சில மாற்றங்கள் ஏற்பட்டதால் நிகழ்ச்சியைத் தொடங்க சற்று காலதாமதம் ஆகிறது.


இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த மீடியா மேசன்ஸ், நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் நிகழ்ச்சியின் இயக்குநர் என அனைவருமே விலகியது தான் இதற்கு காரணம். அவர்கள் அனைவரும் நிகழ்ச்சியில்  இருந்து விலக என்ன காரணம் என்பது இதுவரையில் தெரியவில்லை. நடுவர் செஃப் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக பிரபலமான சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜன் இணைய உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. அதனால் இந்த குக்கு வித் கோமாளி சீசன் குறித்த எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. 


சில தினங்களுக்கு முன்னர் தான் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனுக்கான ஷூட்டிங் தொடங்கியது. அதன் மூலம் இந்த சீசன் போட்டியாளர்களாக யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 



சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் விடிவி கணேஷ், யூடியூபர் இர்ஃபான், வெளிநாட்டில் இருந்து வந்த விவசாயி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடித்து வரும் நடிகர் வசந்த், நடிகை ஷாலின் ஜோயா, நடிகை திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் குக்காக கலந்து கொள்ள உள்ளனர் என கூறப்படுகிறது.


மேலும் கோமாளிகளாக சுனிதா, புகழ், ராமர், குரேஷி உள்ளிட்டோர் கோமாளிகளாக வர உள்ளனர் வேண்டும் தகவல்கள் வெளியானது. இருப்பினும் இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரையில் வெளியாகவில்லை. விரைவில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி துவங்க இருப்பதால் வார இறுதி நாட்களில் விஜய் டிவி ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்க போகிறது.