விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஏராளமான சீரியல்களில் ஒரு சில சீரியல்கள் ரசிகர்களின் அபிமான சீரியல்களாக இருந்து வருகின்றன. அந்த வகையில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் 'தமிழும் சரஸ்வதியும்'. இந்தத் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இல்லத்தரசிகளின் மிகவும் ஃபேவரட் சீரியலாக தமிழும் சரஸ்வதியும் இருந்து வருகிறது.
2021ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் நடிகர் தீபக் தினகர், நக்ஷத்திரா நாகேஷ், மீரா கிருஷ்ணா, ரேகா கிருஷ்ணப்பா, ரமணிச்சந்திரன் மகாலிங்கம், யோகி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
கதைக்களம் :
பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஹீரோ படிக்கவில்லை என்பதால் அவனை திருமணம் செய்து கொள்ளும் பெண் நன்கு படித்தவளாக இருக்க வேண்டும் என ஹீரோவின் அம்மா விருப்பப்படுகிறார். ஆனால் ஹீரோயின் படிக்காமலேயே எம்.பி.ஏ முடித்துவிட்டேன் என பொய் சொல்லி ஹீரோவும் ஹீரோயினும் திருமணம் செய்துகொள்கிறார்கள். இந்த உண்மை தெரிந்த பிறகு குடும்பத்திற்குள் பெரிய பூகம்பம் வெடிக்க படிப்படியாக அந்த பிரச்சினை முடிந்து குடும்பம் சுமுகமானது.
இந்த நிலையில் அந்த வீட்டுக்கு மருமகனாக வருபவர் பழைய பகை காரணமாக குடும்பத்தில் இருப்பவர்களை பழிவாங்குகிறார். மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டு இருக்கும் இந்த தொடர் குறித்த ஷாக்கிங் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
மீரா கிருஷ்ணா நடித்த சீரியல்கள் :
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை மீரா கிருஷ்ணா. மலையாளம் மற்றும் தமிழ் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொக்கிஷம் என்ற சீரியல் மூலம் தான் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து நாயகி, வந்தாள் ஸ்ரீதேவி, அன்புடன் குஷி, அருந்ததி, இரட்டை ரோஜா, சித்தி 2 உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான தொடரான கார்த்திகை தீபம் என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.
சின்னத்திரை பிரபலம் தீபக் :
அதே போல தமிழும் சரஸ்வதியும் சீரியலின் ஹீரோ தமிழரசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் தீபக் தினகர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் பல ஆண்டுகளாக சின்னத்திரையில் ஆங்கராக, சீரியல் நடிகராக இருந்து வருகிறார். அண்ணி, மலர்கள், செல்வி, பந்தம், கெட்டி மேளம், திருமதி செல்வம் உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். தென்றல் சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். அதை தவிர ஏராளமான ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார்.
ஷாக் கொடுக்கும் வயது வித்தியாசம் :
44 வயதாகியும் நடிகர் தீபக் இன்றும் தனது பிட்னெஸ்ஸை மெயின்டெய்ன் செய்து வருகிறார். அதனால் அவருக்கு 44 வயது என்றால் யாருமே நம்ப மாட்டார்கள். இதில் அதிர்ச்சியளிக்கும் தகவல் என்னவென்றால் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழரசனின் அம்மா கோதை நாயகியாக நடிக்கும் மீரா கிருஷ்ணாவின் வயது 36 தான் என்பது பயங்கர ஷாக்கிங்காக உள்ளது.
அம்மா - மகன் கேரக்டர்களில் நடித்து வரும் இவர்களுக்குள் இத்தனை ஆண்டுகள் வித்தியாசம் இருப்பது சின்னத்திரை ரசிகர்ளுக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இப்படியெல்லாம் கூடவா நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைப்பார்கள் என புலம்பி வருகிறார்கள் சின்னத்திரை ரசிகர்கள். இருப்பினும் தீபக் மற்றும் மீரா கிருஷ்ணா இருவரின் நடிப்பும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.