தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் என்ற உடனே அனைவரின் நினைவுகளில் வரும் முதல் சேனல் சன் டிவி தான். அந்த அளவுக்கு அதன் ஆதிக்கம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதிலும் சன் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு தான். காலை முதல் இரவு வரை ஏராளமான சீரியல்கள் தினந்தோறும் ஒளிபரப்பாகி வருகின்றன. அதே போல டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையிலும் சன் டிவி சீரியல்கள் தான் என்றுமே முதல் இடங்களை தக்க வைத்து வருகிறது. சிங்கப்பெண்ணே, கயல், எதிர்நீச்சல், வானத்தை போல உள்ளிட்ட சீரியல்கள் என்றுமே முதல் நிலையை தக்க வைத்து கொண்டு மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளி வருகின்றன. ரசிகர்கள் மத்தியில் சன் டிவி சீரியல்களுக்கு இருக்கும் வரவேற்பு தான் அதற்கு முக்கியமான காரணம்.
டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையில் மிகவும் குறைவான ரேட்டிங் கொண்ட சீரியல்கள், அதிகம் வரவேற்பு பெறாத சீரியல்கள் என்றால் அதை உடனடியாக முடித்துவிட்டு புதிய சீரியலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ரசிகர்களை என்டர்டெய்ன் செய்வதையே முதல் நோக்கமாக வைத்திருப்பது தான் சன் டிவி தன்னுடைய வெற்றியை இன்று வரை தக்கவைத்துள்ளதற்கு முக்கியமான காரணம்.
2020ம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'அன்பே வா'. விராட் மற்றும் டெல்னா டேவிஸ், மஹாலக்ஷ்மி, அருண்குமார், ஸ்ரீகோபிகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த தொடர் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதால் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. அதனால் புதிய தொடர்களின் வருகை எதிர்பாக்கப்படுகிறது.
புதிய சீரியல்களின் வருகையால் பழைய சீரியல்களான Mr. மனைவி மற்றும் இனியா ஆகிய இரு தொடர்களின் நேரமும் மாற்றப்பட உள்ளது. இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இனியா தொடர் இனி 10 மணிக்கும், இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த Mr. மனைவி தொடர் இனி 10.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது என்ற அதிகாரபூர்வமான தகவலை ப்ரோமோ மூலம் தெரிவித்துள்ளது சன் டிவி. இந்த இரு தொடர்களுமே இனி திங்கள் முதல் ஞாயிறு வரை வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாக உள்ளது.
சின்னத்திரை ரசிகர்களுக்கு நேர மாற்றம் சற்று வருத்தத்தை கொடுத்தாலும் வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாகும் என்ற தகவல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. மேலும் புதிதாக வரப்போகும் அந்த புதிய சீரியல் எதுவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.