நீயா நானா கோபிநாத்


இன்று பெரும்பாலான மக்களால் நீயா நானா நிகழ்ச்சியின் வழியாக அறியப்படுகிறார் கோபிநாத். ஊடகத்  துறையில் ஆண்டுகளைக் கடந்துள்ள கோபிநாத் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார். மக்கள் யார் பக்கம், சிகரம் தொட்ட மனிதர்கள், நடந்தது என்ன, என் தேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் கோபிநாத்.


இதில் தற்போது அவர் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா, நிகழ்ச்சியில் பல்வேறு சமூக தரப்பினர்களுடன் பல்வேறு சமூக பிரச்சனைகளை விவாதித்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சமூக வலைதளங்கள் மற்றும் பொதுவெளியில் பல்வேறு விவாதங்களை உருவாக்கி இருக்கின்றன. ஊடகத் துறைத் தவிர்த்து பாஸ்வர்ட், ப்ளீஸ் இந்த புக்க படிக்காதீங்க உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். மேலும் தொடர்ச்சியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடனும் பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதித்து வருகிறார்.


கோபிநாத்தின் இளமைக் காலம்


இன்று கோட் சூட் அணிந்து கனத்த குரலில் நிகழ்ச்சிகளைத் தனித் தோரணையில் நடத்து வரும் கோபிநாத்தின் இளமைக் காலங்கள் இவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஊடகத் துறையில் தன்னுடைய 25 ஆண்டுகால ஊடக வாழ்க்கைப் பற்றிய பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார் கோபிநாத். இதில் தன்னுடைய இளமைக் காலத்தைப் பற்றிய சில அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.


கலர் கலர் கனவுகள் இருந்ததில்லை!


”ஊடகத்துறையில் இந்த வேலையைதான் செய்ய வேண்டும் என்று போதுமான தெளிவு என்னிடம் இல்லை. ஆனால் அன்று பிரபல பத்திரிகையாளராக இருந்த ரபி பெர்னார்ட் தான் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தார். அவர் நேர்க்காணல் எடுக்கும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது. என் அண்ணன் சென்னையில் திரைப்பட தொழில்நுட்ப கல்லூரியில் படித்தார்.


சினிமாத் துறை என்பது மிகுந்த சவால்கள் நிறைந்தது என்பதால் என்னை கம்பியூட்டர் சைன்ஸ் படிக்க வைக்க என் வீட்டில் முடிவு செய்து சென்னை அனுப்பி வைத்தார்கள். என் அண்ணன் மற்றும் அவரது  நண்பர்கள் இங்கு இருந்ததால் ஊடகத் துறை என்பது எத்தனை சவால்கள் நிறைந்தது என்பது எனக்கு அவர்கள் மூலம் தெரிந்தது. அதனால் இந்த துறையில் நான் இருக்கப் போகிறேன் என்றால், அதற்காக கடுமையாக உழைப்பையும் நேரத்தையும் கொடுக்க வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டேன்.


என்னுடைய 25 ஆண்டுகால அனுபவத்திலும் நான் சோர்வாக உணராததற்கு ஒரு முக்கியக் காரணம் நான் செய்த எல்லா விஷயத்தையும் நேரமையாக முழு ஈடுபாட்டுடன் செய்தேன். தற்செயல், லக் என்றெல்லாம் நாம் சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு ஒன்று வேண்டும் என்றால் அதற்காக நீங்கள் தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டால் உங்களுக்கான வாய்ப்புகள் தானாக உங்களை இழுத்துக் கொள்ளும்“ என்று கோபிநாத் கூறியுள்ளார்.


பகலில் துணி வியாபாரம்


” என்னுடைய அண்ணனுடன் ஒரு வேலையாக ஒரு தொலைக்காட்சி ஸ்டுடியோவிற்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு நடக்க இருந்த நிகழ்ச்சியின் ஆங்கர் வராததால் அந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் புதிதாக ஒருவரை தேடிக் கொண்டிருந்தார். அப்போது நான் அவரிடம் போய்  எனக்கு இதில் ஆர்வம் இருக்கிறது என்று சொன்னேன். அதே இடத்தில் எனக்கு ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்து என்னை ஓகே செய்தார்கள். 


என்னுடைய முதல் வேலை அப்போது வெளியாகும் ஹாலிவுட் படங்களை அறிமுகம் செய்ய வேண்டும் . நான் அறிமுகம் செய்த முதல் படம் சரியாக நினைவில் இல்லை, ஆனால் நான் அறிமுக செய்த இரண்டாவது படம் டைட்டானிக். இந்தப் படத்தை அறிமுகம் செய்த காரணத்திற்காக டைட்டானிக் படத்தை எனக்கும் இன்னும் சில தயாரிப்பாளர்களுக்கும் மட்டும் தனியாக டைட்டானிக் படம் திரையிட்டார்கள். என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம் அது.


எனக்கு பிடித்த வேலை கிடைத்தாலும் என்னுடைய பொருளாதாரத்தை சமாளிப்பாதற்கு நான் வேறு வேலைகள் செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. இதனால் தினமும் துணிகளை விற்பனை செய்யும் வேலை செய்து வந்தேன். பகல் முழுவதுல் 25 கிலோ பையைத் தூக்கிக் கொண்டு தெருத் தெருவாக துணிகள் விற்கச் செல்வேன். இப்போது நான் தங்கி இருக்கும் கே.கே.நகரில் நான் துணி விற்காத தெருவே கிடையாது. மாலை வேலை முடித்துவிட்டு அவசரம் அவசரமாக வீட்டுக்கு வந்து முகம் கழுவிவிட்டு நிகழ்ச்சித் தொகுப்பாளராக செல்வேன்” என்று கோபிநாத் கூறியுள்ளார்.