விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மதியம் முதல் இரவு வரை ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. 


புதிய டைம் ஸ்லாட்:


மாலை நேரங்களில் ஒளிபரப்பாகி வந்த சில சீரியல்களின் நேரங்கள் சமீபத்தில் மாற்றப்பட்டன. பிக் பாஸ் சீசன் 7 துவங்க உள்ளது தான் அதற்கான காரணமாக கூறப்பட்டது. புதிய டைம் ஸ்லாட்களில் ஒளிபரப்பாகி வந்த விஜய் டிவி சீரியல்களின் படி 7.00 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'ஆஹா கல்யாணம்' சீரியல் 7.30 மணிக்கும், 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'ஈரமான ரோஜாவே 2 ' இரவு 9.30  மணிக்கும், 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'மகாநதி' சீரியல் மாலை 7.00 மணிக்கும் ஒளிபரப்பாகி வந்தது. 


 



இந்த நேர மாற்றம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் தற்போது அதில் மேலும் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த செய்தி விஜய் டிவி சீரியல்களின் தீவிர ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 


கதைக்களம் :


ஈரமான ரோஜாவே சீரியலின் முதல் பாகம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி நிறைவு பெற்றதை அடுத்து அதன் இரண்டாவது சீசனாக வேறுபட்ட கதைக்களத்துடன் மாற்றப்பட்ட நடிகர்களுடன் கடந்த ஆண்டு ஜனவரி  மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் "ஈரமான ரோஜாவே 2 ". சித்தார்த், திரவியம், கேப்ரியலா, ஸ்வாதி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தத் தொடரில், தம்பி காதலித்த பெண்ணை அண்ணனும், அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை தம்பியும் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது. 


 



அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும் சூழலில் குடும்பத்திற்குள் ஏற்படும் குழப்பங்கள், மனக் கசப்புகள், அதில் இருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள், புதிய வாழ்க்கையை எப்படி ஏற்று கொண்டு வாழ துவங்கிகிறார்கள் என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம். 


தற்போது நாயகிகளின் கடைசி தங்கையும், நாயகர்களின் கடைசி தம்பியும் காதலிப்பதை மறைத்து வெவ்வேறு நபர்களுடன் திருமணம் முடிவாகி உள்ளது. இருவரும் அவர்களுக்குள் இருக்கும் காதலை குடும்பத்திற்காக மறைக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒன்று சேர்வார்களா? இல்லையா? என்ற பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது ஈரமான ரோஜாவே 2  சீரியல். 


மீண்டும் டைம் ஸ்லாட் மாற்றம் :


இந்த நிலையில் தற்போது மீண்டும் ஈரமான ரோஜாவே 2 சீரியலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் நான் ப்ரைம் டைமுக்கு மாற்றப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 7 துவங்க உள்ளதாலும், இந்த சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங் குறைந்ததாலும் வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை விஜய் டிவி இன்னும் வெளியிடவில்லை. 


ஈரமான ரோஜாவே 2 சீரியலின் நேர மாற்றம் விஜய் டிவி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவர்கள் சொல்வது போல அதன் டி.ஆர்.பி ரேட்டிங் ஒன்றும் குறையவில்லை. பிக் பாஸ் தொடங்குவதால் தான் இந்த நேர மாற்றம் என புலம்பி வருகிறார்கள்.