ஜோதிடம் பார்ப்பவர்கள் மன்னிக்க முடியாத குற்றவாளிகள் என தமிழா தமிழா நிகழ்ச்சியில் நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து பேசியுள்ளார். 


கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து ஜீ தமிழ் சேனலில் ”தமிழா தமிழா” நிகழ்ச்சி  ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை கிட்டதட்ட 4 வருடங்களுக்கும் மேலாக தொகுத்து வழங்கிய இயக்குநர் கரு.பழனியப்பன் கடந்த ஏப்ரல் மாதம் விலகினார். தொடர்ந்து இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்ட தமிழா தமிழா நிகழ்ச்சி மீண்டும் கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை  பிரபல ஊடகவியலாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்குகிறார். இந்த வாரம் “ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் vs சந்தேகம் எழுப்பும் பொதுமக்கள்” என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. 


இதில் சிறப்பு விருந்தினர்களாக  நடிகைகள் நளினி, அர்ச்சனா, ஜானகி தேவி,சுபத்ரா நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி, இயக்குநர் மாரிமுத்து உள்ளிட்டோர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். 


நவீன பரிகாரங்கள் பற்றி பேசிய மாரிமுத்து 


அப்போது பேசிய இயக்குநர் மாரிமுத்து, “ஜோதிடத்தில் சொல்லக்கூடிய நவீன பரிகாரங்கள் பற்றிய கருத்துகளை தெரிவித்தார். அவர், ‘நான் ரொம்ப நேரமா சிரிப்பை அடக்கிக்கொண்டு உட்கார்ந்து இருக்கேன். ஒரு அறிவியல் விஞ்ஞானி நீண்ட நாள்  கண் முழித்து மின்காந்த அலைகளை கண்டுபிடித்து அதனை சிம்கார்டுகளுக்கு அடக்கி, செல்போன் ஒன்றை கண்டுபிடித்து  உலகத்தையே வியப்பில் ஆழ்த்தி கொண்டிருக்கிறான். ஆனால் செல்ஃபி எடுத்து அழித்தால் பரிகாரம் என சொல்பவர்கள் முன்னாடி நாம் என்னத்த பேச என தெரியவில்லை. எனக்கு ரொம்ப கோபம் வருது.  இந்த உலகத்தில் அறிவியல் ரீதியிலான உண்மையும், புவியியல் ரீதியிலான உண்மைகளுமே மட்டுமே உண்மை. ஜோதிடம் பார்ப்பவர்கள் மன்னிக்க முடியாத குற்றவாளிகள். 


நாம் இந்தியா பின்தங்கி இருக்க காரணமே ஜோதிடர்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக மாட்டார் என எல்லா ஜோதிடர்களும் சொன்னார்கள். ஆனால் இன்னைக்கு முதலமைச்சர் ஆகிட்டாரு. மூஞ்சியை கொண்டு எங்க வச்சிப்பீங்க. எந்த ஜோதிடராவது சுனாமி வந்தது, சென்னை வெள்ளம், கொரோனா பற்றி சொன்னார்களா? வந்ததுக்கு அப்புறம் ஆயிரம் சொல்வார்கள். இந்த நாட்டை பின்னோக்கி இழுத்துட்டு போகிறவர்கள் ஜோதிடர்கள் தான். 


ரஜினிகாந்த் பிறந்த அந்த நிமிடம் அதே நொடியில் இந்தியாவில் மட்டும் 57 ஆயிரம் குழந்தைகள் பிறந்தது. ரஜினி மட்டும் எப்படி சூப்பர் ஸ்டார் ஆனார்? அவரு உழைச்சாரு. கஷ்டப்பட்டாரு. பாலச்சந்தரை போய் பார்த்தாரு. அப்படி ஒரு உழைப்பு உழைச்சிருக்காரு அவர். என்ன சாதாரண நடிகர் என சொல்கிறீர்கள். நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். என்னுடைய சிறிய வயதில் ஜாதகத்தையே கிழித்து எறிந்து விட்டேன்” என தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.