குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் தான் பங்கேற்க போவதில்லை என பிரபல சமையற்கலைஞர் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். 


சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளது. காமெடி, ஜாலி, திறமையை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் அனைத்து சேனல்களிலும் வெவ்வேறு பெயர்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி என்றால் அது “குக் வித் கோமாளி (c)யை சொல்லலாம். அந்த நிகழ்ச்சிக்கு என ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. 


குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல சமையற்கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் என இருவரும் பங்கேற்றிருந்தனர். இப்படியான நிலையில் விரைவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக வெங்கடேஷ் பட் பதிவு ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 



அதில், “அன்பானவர்களுக்கு வணக்கம். கடந்த சில மாதங்களாக பல்வேறு சமூக ஊடக தளங்களில் குக் வித் கோமாளியின் சீசன் 5  தொடங்குவது குறித்தும், அந்நிகழ்ச்சியில் நான் தொடர்ந்து நடுவராக பங்கேற்பேன் என்றும் தகவல்கள் வெளியாகியது. இப்படியான பேச்சுகள் தொடர்ந்து வருவதையொட்டி ஒரு சில விஷயங்களை நான் தெளிவுப்படுத்த விரும்பி இந்த பதிவை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறேன்.


அதன்படி புதிய சீசனின் ஒரு பகுதியாக நான் இல்லை என்பதை கூறிக் கொள்கிறேன். என்னுடன் சேர்ந்து மில்லியன் கணக்கானவர்களை மகிழ்வித்த இந்த அற்புதமான நிகழ்ச்சியில் இருந்து நான் விலக உள்ளேன். 
குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்னுடைய உண்மையான ஜாலியான பக்கத்தைக் காட்டியது மற்றும் நான் நானாக இருப்பதற்கு வசதியாகவும் இருந்தது.


கிட்டதட்ட 24 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அங்கம் வகித்த சேனலுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும் எனக்கு வரும் மற்ற வாய்ப்புகளுக்குச் செல்ல முடிவு செய்துள்ளேன். பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளான பலரின் வாழ்க்கைக்கும் சரி, பலருக்கு மன அழுத்தத்தை குறைக்கும் விதமாகவும் அமைந்த இந்த அற்புதமான நிகழ்ச்சியை கருத்துருவாக்கம் செய்து, உருவாக்கி, செயல்படுத்திய எனது அன்புக்குரிய இயக்குனர் திரு.பார்த்திவ் மணி, மீடியா மேசன்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு கடினமான முடிவு என்பது தெரிந்தும் நான் அதில் உறுதியாக நிற்கிறேன். மேலும் விரைவில் வரவிருக்கும் வித்தியாசமான கதை கொண்ட நிகழ்ச்சியின் மூலம் உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அதுவரை எதிர்வரும் நிகழ்ச்சியையும் மேடையையும் பற்றி யூகித்துக்கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியும்,அன்பும் தெரிவித்துக் கொள்கிறேன். குக் வித் கோமாளி சீசன் 5ன் புதிய அணிக்கு எனது வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.