சின்னத்திரை ரசிகர்களை நாள் முழுக்க ஆக்கிரமிக்கும் ஒரு மிகப்பெரிய ஆயுதமாக சீரியல்கள் விளங்குகின்றன. ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும் வகைவகையான சீரியல்களை காலை முதல் இரவு வரை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் முன்னணியில் இருக்கும் தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் எந்த அளவுக்கு ரியாலிட்டி ஷோகளுக்கு வரவேற்பு உள்ளதோ அதே போல சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. 


டி.ஆர்.பி ரேட்டிங் தான் சின்னத்திரையின் மிக முக்கியமான அம்சம் என்பதால் அதில் குறைந்த ரேட்டிங் பெற்ற நிகழ்ச்சிகள் அல்லது சீரியல்கள் எதுவாக இருந்தாலும் சற்றும் தயங்காமல் அவற்றை முடித்து விடுவார்கள். அப்படி டி.ஆர்.பி. ரேட்டிங்கில் மிகவும் மோசமாக தொடர்ந்து சில வாரங்களாக பின்தங்கி இருக்கும் ஒரு சீரியலுக்கு எண்டு கார்டு போட முடிவெடுத்துள்ளனர். 


 



அந்த வகையில் பல ஆண்டுகளாக சூப்பர் ஹிட் சீரியலாக மிகவும் பரபரப்பாக இறுதிக்கட்டம் வரை ஒளிபரப்பான சீரியல் 'பாரதி கண்ணம்மா'. டி. ஆர்.பி ரேட்டிங்கிலும் முன்னணி வகித்து வந்த இந்த சீரியல் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் நிறைவு பெற்றது. பார்ட் 1 முடிந்த உடனேயே வேகவேகமாக பாரதி கண்ணம்மா பார்ட் 2 தொடங்கிவிட்டது. இந்த இரண்டாம் பாகத்தில் ரூபாஸ்ரீ, வினுஷா தேவி, ஃபரினா, தீபா உள்ளிட்டோர் முதல் பாகம் மட்டுமின்றி இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்கள். 


பாரதி கண்ணம்மா பார்ட் 1 ஹீரோயின் வினுஷா தேவி சித்ராவாகவும், சன் டிவியில் ஒளிபரப்பான 'ரோஜா' சீரியல் புகழ் சிபு ஹீரோவாகவும் நடித்து வரும் இந்த சீரியலில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் இவர்கள் திருமணம் குடும்பத்தை எதிர்த்து நடைபெற்றது.


பாரதியின் அம்மா சௌந்தர்யா தன்னை மீறி மகன் திருமணம் செய்து கொண்டதால் வீட்டில் சேர்க்காமல் ஒதுக்கி வைத்துள்ளார். சிறு வயதில் கண்ணம்மாவின் வாழ்க்கையை சீரழித்தவன் எனக் கருதப்படும் நபர் தான் பாரதியின் தந்தை என்பது அவளுக்குத் தெரிய வருகிறது. இதற்கு பின்னணியில் இருந்த சஸ்பென்ஸ் நிறைந்த பிளாஷ் பேக் ஸ்டோரி உடன் இந்த சீரியலை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.


வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 6:30 மணி பாரதி கண்ணம்மா 2வின் கிளைமாக்ஸ் காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது. அந்த பிளாஷ் பேக் சஸ்பென்ஸ் அன்று உடைக்கப்படும், அத்துடன் சுபம் கார்டுடன் சீரியல் முடிவுக்கு வர உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த சீரியல் இது வரையில் 115 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 



திங்கள் முதல் வெள்ளி வரை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் முடிந்த பிறகு அந்த நேரத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், ராதிகா சரத்குமார், ரேஷ்மா முரளிதரன், வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய தொடரான 'கிழக்கு வாசல்' ஒளிபரப்பாக உள்ளது.


ஒரே நேரத்தில் பாரதி கண்ணம்மா 2 கிளைமாக்ஸ் மற்றும் புதிய சீரியலின் தொடக்கம் என்பதால் விஜய் டிவி ரசிகர்களுக்கு உற்சாகத்தில் உள்ளனர்.