பாக்கியலட்சுமி சீரியலில் கோபி, ராதிகா வீட்டில் இருந்து மீண்டும் தன் வீட்டுக்கே செல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.


இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் நடக்கும் காட்சிகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 


எழில் கொடுத்த வாக்குறுதி 


ஹோட்டலில் சாப்பிடும் போது இனியாவிடம் படிப்பில் கவனம் செலுத்துமாறு கூறி அவளுடன் படிக்கும் மாணவன் தன் கஷ்டங்களை மறந்து இருப்பது குறித்தும் பாக்யா பேசி ஊக்கப்படுத்துகிறார். இதனையடுத்து எழில், அலுவலகத்தில் அம்ரிதாவுடன் பேசிக் கொண்டு இருக்கிறார். அவரது அப்பா, அம்மா பேசியது குறித்தும் தன் வீட்டில் இருக்கும் சூழல் குறித்தும் எழில் பேச, அம்ரிதா அவரது கையை பிடித்து கண்டிப்பாக உனக்காக இருப்பேன் என சொல்வதை அங்கு வரும் தயாரிப்பாளரின் மகள் வர்ஷினி பார்த்து டென்ஷனாகிறார். 


இதனையடுத்து ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ் என எல்லாம் வாங்கிக் கொண்டு, எழில் இல்லாத நேரத்தில் அவர் வீட்டுக்கு செல்லும் வர்ஷினி குடும்ப உறுப்பினர்களை கவர்வதற்கான ஐடியாவெல்லாம் செய்கிறார்.  


அட்ரஸை மாற்றச் சொன்ன ராதிகா 


கொரியர் கொண்டு வரும் நபர் பழைய அட்ரஸூக்கு செல்ல ராதிகா புது வீட்டுக்கு வருமாறு கூறி போனில் கத்துகிறார். இதைக்கேட்டு என்னவென்று விசாரிக்கும் கோபியிடம் அட்ரஸை மாத்துனா இப்படியெல்லாம் நடக்குமா என கூறி வாக்குவாதம் செய்கிறார். ஆனால் தான் போனில் ரேஷன் கார்டை கேட்டபோது பாக்யா திட்டியதாக கோபி சொல்ல, நீங்களே வேணாம். உங்க பேரு மட்டும் வேணுமோ என ராதிகா  டென்ஷனாகிறார். நீங்க ரொம்ப பயப்படுறீங்க என ராதிகா சொல்ல ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் இப்பவே அந்த வீட்டுக்கு போய் ரேஷன் கார்டோட வாரேன் என சொல்லி விட்டு கோபி கிளம்புகிறார். 


வீட்டுக்கு போன கோபிக்கு கிடைத்த அர்ச்சனை 


நேராக வீட்டுக்கு செல்லும் கோபி வாசலில் போன் பேசக் கொண்டியிருக்கும் செழியனை கூப்பிட, அவர் அதிர்ச்சியடைந்து உள்ளே செல்கிறார். உடனே ராமமூர்த்தி இந்த மண்ணாங்கட்டி இப்ப எதுக்கு இங்க வந்துருக்கானாம் என கேட்க பாக்யா, ஈஸ்வரி, ஜெனி, இனியா என அனைவருமே ஷாக்காகின்றனர். நான் பாக்யாவிடம் நான் கேட்டதை கொடுக்க மாட்டியா  என எகிறுகிறார். என்ன கேட்டான் என ஆளாளுக்கு முழிக்கின்றனர். செழியன் என்ன கேட்டாரு என பாக்யாவிடம் கேட்க, அதை அவர்கிட்டயே கேளு என பதில் வருகிறது. 


உடனே கோபி ரேஷன் கார்டு வேணும். என் அட்ரஸை மாத்தணும். ஏய் பாக்கியா போய் எடுத்துட்டு வா என சொல்ல, உடனே பாக்யா இந்த ஏய், ஓய் எல்லாம் சொல்ல நான் ஒன்னும் உங்க பொண்டாட்டி இல்ல புரியுதா. மரியாதை ரொம்ப முக்கியம் என தெரிவிக்கிறார். இதனால் கோபி அதிர்ச்சியடைவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.