ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை அர்ச்சனா தன்னுடைய வாழ்க்கையில் வாராஹி அம்மன் செய்த மகத்தான சம்பவம் குறித்து பேசியுள்ளார். 


கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து ஜீ தமிழ் சேனலில் ”தமிழா தமிழா” நிகழ்ச்சி  ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை முதலில் இயக்குநர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கினார். தமிழ் விவாத நிகழ்ச்சிகளில் அதிக பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சியாக தமிழா தமிழா திகழ்ந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் இந்த நிகழ்ச்சியில் இருந்து பல காரணங்களால் இயக்குநர் கரு.பழனியப்பன் விலகினார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 


இதனிடையே தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக தமிழா தமிழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமல் நிறுத்தப்பட்டிருந்தது.  ரசிகர்கள் ”தமிழா தமிழா” நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த வாரம் முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை பிரபல ஊடகவியலாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்குகிறார். இந்த வாரம் “ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் vs சந்தேகம் எழுப்பும் பொதுமக்கள்” என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பானது. 


இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை அர்ச்சனா தன்னுடைய வாழ்க்கையில் வாராஹி அம்மன் செய்த மகத்தான சம்பவம் குறித்து  பேசியுள்ளார். அவர் தனது உரையில், “ என்னுடைய 5 வயதில் பாட்டி வீட்டில் தான் வளர்ந்த நான் ஏன் என்னுடைய தங்கை மாதிரி அம்மா, அப்பா கூட இருக்க முடியல என அவரிடம் கேட்டேன். அதற்கு என்னுடைய பாட்டி, ‘உனக்கு பிறக்கும்போதே ஜென்மத்துல சனி. அதனால் அப்பா, அம்மா பிரிஞ்சிருவாங்கன்னு இருக்கு. அதனால ஏதாவது ஆகிடும்ன்னு இங்க பாட்டி, தாத்தா கூட இருக்கிறாய்’ என சொன்னார்கள். எங்க பாட்டி வீட்டுல தனியா ஒரு பூஜை ரூம் இருந்துச்சு. ஐயப்பன் சாமி தான் உனக்கு அப்பா, முண்டகக்கண்ணி அம்மன் தான் உனக்கு அம்மான்னு நினைச்சிக்க. உனக்கு அப்பா, அம்மா இல்லைன்னு நினைக்க வேண்டாம் என சொல்லியே சின்ன பிள்ளையில் இருந்தே வளர்த்துள்ளார்கள். 


நானும் அப்படித்தான் நினைக்கிறேன். எனக்கு எல்லாமுமாக சாமியை தான் நினைக்கிறேன். சாமிகிட்ட உட்கார்ந்து பேசுறது, நான் அழுதாலோ அல்லது கேள்வி கேட்டாலோ மணி அடிக்கிறது, பல்லி எட்டிப்பார்த்து எனக்கு பதில் சொல்றது இதெல்லாம் சொல்றதுக்கு காமெடி இருக்கலாம். ஆனால் என் வாழ்க்கையின் தாக்கங்கள் இவை. 


ஒருமுறை என்னுடைய வீட்டுக்குள் வாராஹி அம்மன் வரணும்ன்னு, அந்த சிலையை பார்த்து அழகா இருக்குன்னு வீட்டுக்கு வாங்கிட்டு வர்றோம். அட்டை டப்பால வந்த அம்மனை வெளியே எடுத்து பூஜையறையில் வைத்து அம்மா கும்பிட்டு போய்ட்டாங்க. அதன்பிறகு நான் குடும்பத்தோட கூர்க் நகருக்கு சுற்றுலா சென்று விட்டோம். 3 நாட்களாக வீட்டில் இருந்த அக்கா, ‘திடீர்னு உறுமுற சத்தம் கேட்குது. பாத்திரம் பறக்குது.. என்னன்னு தெரியல’ என சொன்னார். உடனே நாங்க வாராஹி உபாசகருக்கு போன் பண்ணி விவரம் கேட்டோம். 


அதற்கு அவர், ‘நீ பயப்படாம தூங்கு.. பிரம்ம முகூர்த்தத்தில் உனக்கு பதில் சொல்லுவாங்க’ என சொன்னார். என்னுடைய கனவில் வந்த அம்மன், ‘நீ என்ன என்னைய அட்டை பெட்டியில தூக்கிட்டு வர்ற. பல்லாக்கில் தானே தூக்கிட்டு வரணும்’ என தெரிவித்தார். அதன்பிறகு 48 நாட்களுக்குள் அந்த அம்மனை அலங்கரித்து, பல்லாக்கில் தூக்கி வந்து அபிஷேகம் செய்தேன். இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என அர்ச்சனா தெரிவித்துள்ளார்.