கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்


நடிகர் அல்லு அர்ஜூன் கடந்த சில நாட்கள் முன்பாக தெலங்கானா போலீஸால் கைது செய்யப்பட்டார். புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது அல்லு அர்ஜூனை பார்க்க முண்டியடித்த கூட்டத்தில் ரேவதி என்கிற பெண் ஒருவர் உயிரிழந்தார் மேலும் அவரது 9 வயது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் .


அல்லு அர்ஜூன் கைது 


கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் மீது, ஹைதராபாத் போலீஸ்  ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தது.  இந்த வழக்கின் விசாரணைக்காக அல்லு அர்ஜூனை கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி  காவல்துறை கைது செய்தது.  போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளில்லாமல் அல்லு அர்ஜூன் திரையரங்கத்திற்கு வந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 


இதையடுத்து, அல்லு அர்ஜூனை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தருணத்தில் தற்போது அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது தெலங்கானா உயர்நீதிமன்றம். நடிகர் என்பதாலேயே, வாழ்வுரிமையை பறிக்க இயலுமா என்றும் கேள்வி எழுப்பியது.


தெலங்கானா முதலமைச்சரை திட்டிய ரசிகர்கள்


அல்லு அர்ஜூனை திடீரென்று காவல் துறை கைது செய்ததில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்தின் தனிப்பட்ட அரசியல் நோக்கம் இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. கைது செய்யப்படுவதற்கு முன்பாக டெல்லியில் நடைபெற்ற புஷ்பா 2 படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் அல்லு அர்ஜூன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் விரைவில் அரசியலுக்கு வரவிருப்பதாக தகவல்கள் பரவின. ஆனால் அல்லு அர்ஜூன் அரசியலுக்கு வரவில்லை என்று அவரது சமூக வலைதள நிர்வாகிகள் சார்பாக தெளிவுபடுத்தப்பட்டது. இது நடந்த அடுத்த நாளே அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டது ரசிகர்களின் கோபத்தை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் பக்கம் திருப்பியது. அவரை விமர்சித்து அல்லு அர்ஜூன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள். 


அல்லு அர்ஜூன் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு 






முதலமைச்சரை தகாத வார்த்தைகளால் திட்டிய காரணத்திற்காக அல்லு அர்ஜூன் ரசிகர்கள் மீது நான்கு குற்றப்பிரிவுகளின் கீழ் தெலங்கானா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்குப்பதிவு செய்தவர்கள் மீது காவல்துறை விரைவில் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது.