கல்கி 2898 AD


வைஜயந்தி மூவிஸ் தயாரித்து நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் கல்கி 2898 . பிரபாஸ் , அமிதாப் பச்சன் , தீபிகா படூகோன் , கமல்ஹாசன் , திஷா பதானி , பசுபதி , அன்னா பென் , ஷோபனா  உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 27-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


புராணக் கதையை மையமாக வைத்து சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகியுள்ள கல்கி படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.600 கோடி. பிரபாஸ் நடிப்பில் ரூ.500 கோடி பொருட்செலவில் உருவான ஆதிபுருஷ் படம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து சலார் படமும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இப்படியான நிலையில் கல்கி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு குவிந்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக உள்ளனர் படக்குழுவினர். 


டிக்கெட் விலையை அதிகரித்த தெலங்கானா மாநிலம்


கல்கி படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இதனை படக்குழு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தெங்கானாவில் அதிகாலை 5:30 மணிக்கு முதல் காட்சியை தொடங்குவதற்கான அனுமதியை தெலங்கானா அரசிடம் பெற்றுள்ளது. மேலும் திரையரங்குகளில் காட்சியை அதிகரிக்கவும் டிக்கெட் டிக்கெட் விலையை அதிகரிக்கவும் திரையரங்க உரிமையாளர்களுக்கு தெலங்கானா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி படம் வெளியாகிய முதல் 8 நாளைக்கு தனித்திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டின் விலையில் 70 ரூபாயும் மல்ட்டிபிளக்ஸில் ஒரு டிக்கெட்டின் விலை 100 ரூபாயும் அதிகரித்துள்ளது. 


டிக்கெட் விலையில் இந்த மாற்றம் ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது. லாபத்திற்காக இப்படியான ஒரு முடிவை எடுப்பது பலவிதங்களில் தவறான விளைவுகளை ஏற்படுத்தும் என நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள். ”தெலுங்கு திரை உலகம் ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட சிரமப்படுகிறது. அதனை எதிர்கொள்ள இபபடியான ஒரு முடிவு தேவையா? இதே போல் எல்லா படங்களுக்குமான டிக்கெட் விலை அதிகரித்தால் மக்கள் எப்படி படம் பார்க்க வருவார்கள். சினிமா பார்ப்பதை ஒரு ஆடம்பரமாக மாற்றிவிடாதீர்கள்” என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். 


இன்னொருவர் ‘ இப்போது தான் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறந்திருக்கிறார்கள். ஸ்கூல் ஃபீஸ் கட்டுவதே அவ்வளவு சிரமமாக இருக்கும் நேரத்தில் இவ்வளவு விலை கொடுத்து யார் படம் பார்க்க வருவார்கள்“ என்று கூறியுள்ளார். மேலும் டிக்கெட் விலை அதிகரித்தால் மக்கள் படங்களை செல்ஃபோனில் தரவிறக்கி பார்க்கதான் தூண்டப்படுவார்கள் என்று கருத்துக்கள் பதிவிடப்படுகின்றன