தன்னைக் கொல்ல பலமுறை முயற்சி நடந்துள்ளதாக பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா அறிமுகமானார். அப்படத்தில் ஆண்களையே பிடிக்காமல் இருக்கும் அவரது கேரக்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது. குறிப்பாக என் ஜன்னல் வந்த காற்றே பாடலில் அவர் போட்ட ஆட்டத்தை யாராலும் மறக்கவே முடியாது. ஆனால் என்னவோ அதன்பிறகு எந்தவித தமிழ் படங்களிலும் தனுஸ்ரீ தத்தா நடிக்கவில்லை.
இதனிடையே 2018 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் #MeToo இயக்கத்தை தொடங்கினார். இதனையடுத்து நடிகர் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மற்றும் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி ஆகியோர் மீது Horn 'Ok' Pleassss படப்பிடிப்பு தளத்தில் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார். ஆனால் நானே படேகருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி போலீசார் வழக்கை முடித்து வைத்தனர்.
இதனையடுத்து தனுஸ்ரீ தத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர, பதிலுக்கு தனு மீது நானே படேகர் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். அதன்பின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் குறிவைத்து துன்புறுத்தப்படுவதாக தனுஸ்ரீ பகீர் புகாரை முன்வைத்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், பல்வேறு வழிகளில் தன்னைக் கொல்ல பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் மீ டூ புகாரை தொடர்ந்து தனது காரில் பலமுறை பிரேக்குகள் சேதமடைந்ததாகவும், சமீபத்தில் ஒரு விபத்தை சந்தித்ததால் அதிக இரத்த இழப்பும் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல் யாரோ ஒருமுறை தனக்கு விஷம் கொடுக்க முயன்றதாகவும்,தனது வீட்டில் இருந்த வேலைக்காரி நோய்வாய்ப்பட்டதால் தண்ணீரில் ஏதுவும் கலந்திருக்குமோ என சந்தேகப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.