கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நடிகர் விஜய் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


தமிழ்நாட்டு மக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை கள்ளச்சாராய மரணங்கள் ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். 75க்கும் மேற்பட்டவர்கள் விழுப்புரம்,புதுச்சேரி, சேலம் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கள்ளச்சாராயம் விற்பனைக்கு தமிழ்நாடு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


அரசின் அலட்சியம் காரணம் - விஜய்


இதனிடையே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழ்நாடு அரசை குற்றம் சாட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.


கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.


பிறந்தநாள் கொண்டாட்டங்களை நிறுத்த முடிவு


இதனிடையே நாளை மறுநாள் (ஜூன் 22) நடிகர் விஜய் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இந்த பொன்விழா பிறந்தநாளை ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படியான நிலையில் தமிழகத்தையே அதிரவைத்துள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக விஜய் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ஏற்கனவே மக்கள் சேவை புரிய அரசியலில் களம் கண்டுள்ள விஜய், மக்கள் துயரிலும் பங்கெடுக்கும் வகையில் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை எளிமையாகவோ அல்லது இன்னொரு நாளில் வைத்துக் கொள்ளவோ அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.