இந்திய சுதந்திர தினம்(Independence Day) நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ் சினிமாவில் இடம் பெற்ற தேச பக்தி பாடல்கள்(Patriotic Songs Tamil) குறித்து காணலாம். 


நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. 75வது சுதந்திர தினம் என்பதால் மத்திய, மாநில அரசுகள் இதனை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கலை, இலக்கிய போட்டிகள் உள்ளிட்ட பல போட்டிகள் மாணவர்கள், அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்களில் நடத்தப்பட்டு வந்தது. பொதுமக்களில் பலரும் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தங்களது தனித் திறமைகளை வெளிக்கொணரும் வண்ணம் பல சாதனைகளை செய்து வருகின்றனர். 


இதனிடையே தமிழ் சினிமாவில் இடம் பெற்ற தேச பக்தி பாடல்கள் பற்றி காணலாம். 


1. என்று தணியும் இந்த சுதந்திர தாகம்- கப்பலோட்டிய தமிழன்


பி. ஆர். பந்துலு இயக்கித் தயாரித்து 1961 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கப்பலோட்டிய தமிழன். இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களுள் ஒருவரான வ. உ. சிதம்பரம் பற்றிய படத்தில் வ.உ.சியாக சிவாஜி நடித்திருப்பார். இப்படத்தில் என்று தணியும் இந்த  சுதந்திர தாகம் என்ற பாடல் திருச்சி லோகநாதன் குரலில் ஜி.ராமநாதன் இசையில் இடம் பெற்றது. 



2. இனி அச்சம் அச்சம் இல்லை - இந்திரா


1996 ஆம் ஆண்டு சுஹாசினி இயக்கத்தில் அரவிந்த் சாமி, அனுராதா ஹாசன், ராதாரவி, நாசர் போன்ற பலர் நடித்த இந்திரா படத்தில் இப்பாடல் இடம் பெற்றது. இதனை  அனுராதா, ஜி.வி பிரகாஷ், சுஜாதா, ஸ்வேதா, எஸ்தெர், ஷா உள்ளிட்ட பலரும் பாடியுள்ளனர். வைரமுத்து வரிகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார். 



3. தாய் மண்ணே வணக்கம் - வந்தே மாதரம் 


வந்தே மாதரம் ஆல்பத்தில் வைரமுத்து வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் வெளியான இப்பாடல் அனைவராலும் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது. அந்த அளவுக்கு இப்பாடல் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். 



4. வந்தே மாதரம் - பாரதி


 2000 ஆம் ஆண்டு வெளிவந்த  ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்த பாரதி திரைப்படம் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. பாரதியாராக சாயாஜி ஷிண்டேயும், செல்லம்மாவாக தேவயானியும் நடித்த இத்திரைப்படம் 2000 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.  



5. தமிழா தமிழா - ரோஜா 


1992 ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா படத்தில்  அரவிந்த்சாமி, மதுபாலா  ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர்.இந்த படத்தின் மூலம் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதில்  தமிழா தமிழா பாடல் இடம் பெற்றிருந்தது. 



6. தாயின் மணிக்கொடி - ஜெய்ஹிந்த் 


1994 ஆம் ஆண்டு அர்ஜூன் இயக்கி, நடித்த ஜெய்ஹிந்த் திரைப்படத்தில் இடம் பெற்ற டைட்டில் பாடலான தாயின் மணிக்கொடி பாடல் தேசபக்தி பாடல்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. வித்யாசாகர் இசையமைத்திருந்த இப்பாடலை வைரமுத்து எழுதியிருந்தார். 



7. மகான் காந்தி மகான் - நாம் இருவர் 


1947 ஆம் ஆண்டு  ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில்  டி. ஆர். மகாலிங்கம், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்த நாம் இருவர் படத்தில் மகான் காந்தி மகான் பாடல் இடம் பெற்றது. 



8. இந்திய நாடு - பாரத விலாஸ்


1973 ஆம் ஆண்டு பாரத விலாஸ் படம் ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்தியாவின் ஒற்றுமையை விளக்கும் விதமாக ஒற்றை குடியிருப்பை மையமாக வைத்து மொழி இன வேறுபாடின்றி ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இதன் கதை அமைக்கப்பட்டிருந்தது. 



9. கப்பலேறி போயாச்சி - இந்தியன்


 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் திரைப்படம் பிளாஷ்பேக் காட்சிகள் சுதந்திர காலக்கட்டம் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றது. இதில் கப்பலேறி போயாச்சி பாடல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சுசீலா குரலில் இடம் பெற்றது. 



10. எனது இந்தியா - சுதந்திர தின ஆல்பம் 


ஏ.ஆர்.பரத் குமார் எழுதிய இப்பாடலை மனோ, நித்யஸ்ரீ மகாதேவன், முகேஷ், அபய் ஜோத்பூர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.