ஒரே நேரத்தில்  இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இருவருடனும் பணியாற்றியது குறித்து பாடலாசிரியரும் கவிஞருமான யுகபாரதி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


பாடலாசிரியர் யுகபாரதி:


1990கள் தொடங்கி பல இதழ்களிலும் வெளியான தன் கவிதைத் தொகுப்புகளால் பிரபலமான யுகபாரதி, ஆனந்தம் படத்தில் இடம்பெற்ற ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’ பாடல் மூலம் திரைப்படப் பாடலாசிரியராக அறிமுகமானார்.


இவரது முதல் பாடலே பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடிக்க, ரன் படத்தில் இடம்பெற்ற ’காதல் பிசாசே’, பார்த்திபன் கனவு படத்தில் இடம்பெற்ற ‘கனா கண்டேனடி தோழி’ என அடுத்தடுத்த தன் பாடல்களால் கோலிவுட்டில் கவனம் ஈர்த்தார்.


ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி:


தொடர்ந்து பல்வேறு படங்களில் பல்வேறு இசையமைப்பாளர்களுடன் கடந்த 23 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் பாடலாசிரியர் யுகபாரதி இறுதியாக ஜெய் பீம் படத்தில் இடம்பெற்ற ‘மண்ணிலே ஈரமுண்டு’ பாடலின் வரிகள் மூலம் அனைத்து தரப்பினரையும் ஈர்த்திருந்தார்.


கடந்த மே 18ஆம் தேதி வெளியான மாடர்ன் லவ் படத்தில் 11 பாடல்களை எழுதியுள்ள யுகபாரதி, மாமன்னன் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் ஒரே நேரத்தில் இளையராஜா தொடங்கி ஏ.ஆர்.ரஹ்மான் வரை பணியாற்றியது குறித்து நெகிழ்ச்சி தெரிவித்து யுகபாரதி தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


மாடர்ன் லவ்:


“இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் ஒருங்கிணைப்பில் வெளிவந்துள்ள MODERN LOVE CHENNAI தொடரில் இடம்பெற்றுள்ள பதிமூன்று பாடல்களில், பதினொரு பாடல்களை நான் எழுதியுள்ளேன்.


ஒரே நேரத்தில் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ், ஷான் ரோல்டன் ஆகிய நால்வருடன் இணைந்து பணியாற்றியது அரிய அனுபவம். இப்பாடல்கள் உருவாகிக்கொண்டிருந்த அதே சமயத்தில் இயக்குநர் மாரிசெல்வராஜின் `மாமன்னன்’ பாடல்களும் எழுதும்படி ஆயிற்று. 


ஏ.ஆர்.ரஹ்மான் - இளையராஜா:


காலையில் இளையராஜா, இரவில் ஏஆர் ரஹ்மான் என இருபெரும் ஆளுமைகளுடன் பழகி, பாடல் பணிகளை மேற்கொண்ட விதத்தையும் அப்போது நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும் தனி நாவலாகவே எழுதத் தோன்றுகிறது.  பெரிதினும் பெரிது செய்ய காத்திருத்தல் அவசியம். அவர்களின் உரையாடல்கள் உற்சாகப்படுத்தின. சமூக ஊடகங்களை அவர்கள் இருவருமே லேசான புன்னகையுடன் கடந்துவிடுகிறார்கள். 


ஒரே விஷயத்தை இருவரும் இருவேறு கோணத்தில் பார்ப்பதைப் பின்னர் விவரிக்கிறேன். செயல்களின் வழியேதான் அனுபவங்கள் சித்திக்கின்றன. அந்த அனுபவங்கள் மூலம் வரலாற்றின் மெல்லிய நகர்வுகளை அருகிருந்து பார்க்கும் நல்லதொரு வாய்ப்பினை காலம்  தொடர்ந்து எனக்கு நல்கி வருகிறது. 


கடந்த மூன்று மாதங்களில் நாற்பத்து மூன்று பாடல்களை எழுத முடிந்தது. ராஜூமுருகனின் `ஜப்பான்’, அஸ்வினின் `மாவீரன்’, கெளதம்ராஜின் `கழுவேத்தி மூர்க்கன்’ என படங்களின் வரிசையும், பாடல்களின் எண்ணிக்கையும் மகிழ்ச்சி அளிக்கின்றன.


வாழ்நாள் வசந்தம்:


தியாகராஜா குமாரராஜாவுடன் பணியாற்றிய அனுபவத்தை என் வாழ்நாள் வசந்தமாகவே கருதுகிறேன்.  இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் விரும்புவதை அல்லது எதிர்பார்ப்பதைத் தரமுடியும் என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் வலுக்கிறது.


என்னை வழிநடத்தும் தோழர்களுக்கும், இலக்கியப் பிரதிகளுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.