தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக மட்டும் இல்லாமல், ஆண்டுக்கு 24 படங்கள் நடித்த நளினிக்கு இன்று பிறந்த நாள்.
அமைதியான முகம், அச்சம், காதல், கோபம், சிரிப்பு, வலி என அத்தனை கதாபாத்திரங்களையும் தனது நடிப்பில் காட்டி என்றென்றும் மக்கள் விரும்பும் நடிகையாக இருப்பவர் தான் நளினி. இவரின் தந்தை திருமூர்த்தி, தாய் பிரேமா சினிமாவில் நடனத்துறையில் இருந்தவர்கள். இதனால் சிறுவயதில் இருந்து சினிமாவுடன் இணைந்தே நளினி வளர தொடங்கினார். படிப்பு, நடனம் என சென்று கொண்டிருந்த நளினியின் வாழ்க்கையில் சிறுவயதிலேயே சினிமா நுழைந்து விட்டது.
தமிழ், மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நளினி முதன் முதலாக 1983ம் ஆண்டு டி.ராஜேந்தரின் இயக்கத்தில் வெளிவந்த உயிருள்ளவரை உஷா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அகலமான கண்கள், சுருண்ட முடி, முத்து சிரிப்பு என அறிமுகமான நளினிக்காகவே உயிருள்ளவரை உஷா திரைப்படத்தை திரும்ப, திரும்ப ரசிகர்களை பார்க்க வைத்தது.
முதல் படமே நூறு நாட்களை கடந்து ஓடியதால் நளினியின் மார்க்கெட்டும் கிடுகிடுவென உயர்ந்தது. அடுத்ததாக , இராம. நராயணின் படங்களிலும், நூறாவது நாள், வீட்டுக்கு ஒரு கண்ணகி, 24 மணி நேரம் பிள்ளை நிலா, பாலைவன ரோஜாக்கள், யார் உள்ளிட்ட படங்களிலும் தனது அபாரமான நடிப்பு திறனை நளினி வெளிப்படுத்தி இருப்பார்.
10 ஆண்டுகளாக ஓய்வெடுக்க நேரமில்லாமல் பிசியாக நடித்து கொண்டிருந்த நளினி 1987ம் ஆண்டு நடிகர் ராமராஜனை காதலித்து, எம்.ஜி.ஆர். முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் அருணா மற்றும் அருண் என இரண்டு குழந்தைகள் இருந்த போது, 2000ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக ராமராஜனிடம் இருந்து நளினி விவாகரத்து பெற்றார்.
விவாகரத்து பிறகு காதல் அழிவதில்லை, ஜெயம், சுக்ரன், ஜித்தன், லண்டன், தில்லாலங்கடி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் வில்லியாகவும், அம்மாவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல், சின்னத்திரையிலும் கிருஷ்ணதாசி சீரியல் மூலம் அறிமுகமான நளினி ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’, ’கோலங்கள்’ சீரியல்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். தொடர்ந்து கல்யாண பரிசு, மோதலும் காதலும் என பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
இப்படி வெள்ளித்திரை மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கி வரும் நளினிக்கு ரசிகர்களும், திரை பிரபலங்களும் பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க: Actor Vadivelu: உடல்நலக்குறைவால் சகோதரர் மரணம்.. நிலைகுலைந்து போன வடிவேலு .. சோகத்தில் ரசிகர்கள்