இன்று தமிழ் சினிமாவின் குடும்பங்கள் கொண்டாடிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் 65வது பிறந்தநாள். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார் கே.எஸ். ரவிக்குமார். இவரது திரைப்பயணம் பற்றி மொத்தமாக இன்னொரு நாள் பார்க்கலாம். தற்போது கே.எஸ்.ரவிகுமார் மற்றும் கமலஹாசன் ஆகிய இருவரின் காம்பினேஷனில் வந்தப் படங்களை பற்றி அவரது பிறந்தநாளன்று பார்க்கலாம்.
அவ்வை சண்முகி (1996)
கமலஹாசன் மற்றும் கே.எஸ் ரவிகுமாரின் கூட்டணி தாங்கள் இணைந்த முதல் படத்திலேயே அபார வெற்றி கண்டது. கிரேஸி மோகன் கதைக்கு ரவிக்குமார் திரைக்கதை அமைத்திருப்பார். மோகன், ரவிக்குமார், கமல் ஆகிய மூவரின் காம்பினேஷன் மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக அவ்வை சண்முகி படம் பெண்களை மற்றும் குழந்தைகளிடம் அதிக கவனம் ஈர்த்தது. அவ்வை சண்முகி படத்தின் மூலம் ரவிக்குமார் குடும்பமாக ரசிக்கக் கூடிய இயக்குனராக அடையாளம் பெற்றார்.
தெனாலி (2000)
கிரேஸி மோகன் வசனங்கள் எழுதி கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை அமைத்து இயக்கியப் படம் தெனாலி. கமல்ஹாசன், ஜெயராமன், தேவயானி, ஜோதிகா ஆகியவர்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்தனர். தெனாலி திரைப்படம் விமர்சகர்களிடையே அதன் வசனங்கள் மற்றும் காமெடிக்காக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏ. ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்தார்.
பஞ்சதந்திரம் (2002)
இரண்டு ஆண்டுகள் கழித்து தங்களது அணியை பெரிதாக்க முயன்றது போல் ஐந்து பேர்களை வைத்து பஞ்சதந்திரம் படத்தை இயக்கினார் கே.எஸ்.ரவிகுமார். தமிழ் சினிமாவில் ஃபன் என்று சொல்லப்படு ஒரு பகடி வகைக்கு எடுத்துகாட்டு பஞ்சதந்திரம். இன்றுவரை சிறந்த பொழுதுபோக்கு படங்களின் வரிசையில் பஞ்சதந்திரத்தின் பெயர் இருந்து வருகிறது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்கசொல்லி கோரிக்கை வைத்துள்ளார்கள் ரசிகர்கள்.
தசாவதாரம்(2008)
பஞ்சதந்திரத்திற்கு பிறகு சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் கே.எஸ்.ரவிகுமார் இணைந்து மிக பிரமாண்டமாக எடுத்த படம் தசாவதாரம். இந்த படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் அசத்தியிருப்பார்.
மன்மதன் அம்பு (2010)
2010ம் ஆண்டு வெளியான மன்மதன் அம்பு திரைப்படம் கமல்ஹாசன் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவான மற்றொரு நகைச்சுவை கொண்டாட்டம் ஆகும். இந்த படத்தில் கமல்ஹாசன், திரிஷா, மாதவன், சங்கீதா என பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தது. சூர்யா சிறப்புத்தோற்றத்தில் நடித்திருந்தார்.