தமிழில் வெளியான பக்தி படங்களில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள “பாளையத்து அம்மன்” வெளியாகி இன்றோடு 23 ஆண்டுகள் நிறைவடைகிறது.
அது ஒரு கனாக்காலம்
தமிழ் சினிமாவில் எப்படி காதல், ஆக்ஷன், த்ரில்லர், ஹாரர் என வகை வகையாக படங்கள் வெளியானதோ, அதேபோல் பக்தி படங்களுக்கென்று தனி மார்க்கெட் இருந்தது. தமிழ்நாட்டில் இருக்கும் மிகவும் பிரபலமான கோயில்களின் அம்மனை பற்றியெல்லாம் படங்கள் வந்தது தனிக்கதை. இதில் மிகவும் கைதேர்ந்தவர் மறைந்த இயக்குநர் ராம. நாராயணன். அவரின் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு தீபாவளி ரிலீஸாக “பாளையத்து அம்மன்” வெளியானது. இது திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மனை பற்றியது.
இப்படத்தில் ராம்கி, மீனா, திவ்யா உன்னி, விவேக், சரண்ராஜ், செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எஸ்.ஏ.ராஜ்குமார் பாளையத்து அம்மன் படத்துக்கு இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
பக்தி படங்களில் கதைக்களமே தீய சக்தியை அழித்து நாட்டில் தர்மத்தை நிலை நாட்டுவதே ஆகும். அதே பாணியில் தான் இப்படத்தின் கதைக்களமும் இருக்கும்.
அதன்படி குரு குலத்தில் ஒரு துறவி தனது மாணவர்களுக்கு தீமையையும் தீய சக்தியயையும் அழிக்க மக்களால் கடவுளாக வணங்கப்படும் பாளையத்து அம்மன் மானிட உருவத்தில் பிறப்பார் என தெரிவிக்கிறார். அதேசமயம் தீமையின் பிரதிநிதியாக வரும் அசுரேஸ்வரன் (சரண் ராஜ்), பூமியில் பிசாசின் ஆட்சியை நிறுவுவதை குறிக்கோளாக கொண்டிருப்பார்.
துறவி சொன்னது போல பாளையத்து அம்மன் மானிட பிறவியாக ராம்கி மற்றும் திவ்யா உன்னி தம்பதியினருக்கு குழந்தையாக பிறக்கிறார். ஒருமுறை பாளையத்து அம்மன் கோயிலில் குழந்தையை அழைத்து சென்று காணிக்கை செலுத்தும்போது, குழந்தையை தொட்டிலில் தவற விடுகிறார். உண்டியலில் விழுந்த பொருட்கள் அனைத்தும் அம்மனுக்கு சொந்தம் என கோயில் நிர்வாகம் சொல்ல, குழந்தையை தர மறுக்கிறார். இதனால் குழந்தையை தேடி பாளையத்து அம்மனே அவ்வப்போது வருவதை அறிந்த திவ்யா உன்னி தற்காக்க நினைக்கிறார். மறுபக்கம் குழந்தையை அழிக்க நினைக்கும் சரண் ராஜ் எண்ணத்தை அம்மன் தடுக்கிறது. இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதையாகும்.
பாளையத்து அம்மனாக மீனா சூப்பராக நடித்திருப்பார். நிஜ அம்மனே நேரில் வந்தது போன்ற ஒரு தோற்றத்தை படக்குழு உருவாக்கியிருப்பார்கள்.
பட்டையை கிளப்பிய பாடல்கள்
பக்தி படங்களுக்கு பாடல்கள் தான் ஹைலைட் என்பதற்கு சாட்சி, சினிமா பாடல்கள் என தெரிந்தும் அவை கோயில்களில் ஒளிபரப்பப்படுவது தான். அந்த வகையில் வேப்பிலை வேப்பிலை, ஆடி வந்தேன், பாளையத்து அம்மா நீ பாச விளக்கு, பால் நிலா உள்ளிட்ட அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. இப்பாடல் தியேட்டரில் வரும்போது பல பேர் சாமி வந்தது ஆடியது எல்லாம் வேற லெவல் சம்பவம். இந்தப் படத்தின் பாடல்களை வாலி, காளிதாசன் மற்றும் ராம நாராயணன் ஆகியோர் எழுதியிருந்தனர்.