‛யாருடா இவன் பென்சில்ல கோடு போட்ட மாதிரி?’ என்ற வசனம் புதுப்பேட்டை படத்தில் வரும். வில்லன் தரப்பு தனியாக சிக்கிய தனுஷை பார்த்து கேட்கும் கேள்வி இது. தனுஷ் சினிமாவில் கால்பதித்த நேரத்தில் பலரும் இந்த கேள்வியை கேட்கத்தான் செய்தார்கள். அதற்கு காரணம் தமிழ் சினிமா கடந்த வந்த பாதை. நடிகர்களின் கதாபாத்திரங்களுக்கு உடல் வாகு, முகவாகு என தனியே சொல்லப்படாத கோட்பாட்டையே வைத்திருந்தது தமிழ் சினிமா. குறிப்பாக கதாநாயகனுக்கு. இப்படியெல்லாம் இருந்தால்தான் ஹீரோ மெட்டீரியல் என்ற கோடம்பாக்கம் சொல்லிக்கொண்டு இருந்த நேரத்தில் உள்ளே புகுந்தவர் தான் தனுஷ். மே 10. 2002ம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தில் மெலிந்த உடலுடன் வந்த தனுஷை இது நாயகனா என்று பலரும் வார்த்தை வீசினார்கள். அதேநாள் 19 வருடங்களுக்கு பிறகு இன்று தனுஷ் வளர்ந்திருக்கும் இடம் யாரும் யூகித்துக்கூட பார்த்திருக்க முடியாத அசுர வளர்ச்சி. அசுரனின் வளர்ச்சி.
தொடக்கம் முதலே தனுஷ் என்றால் இந்த வகைப்படங்கள் தான் என்ற ஒரு எல்லையை அவர் யூகிக்க விடவே இல்லை. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன, தேவதையைக் கண்டேன் என தனக்கான இடத்தை பிடிக்க படங்களை அடுக்கிக் கொண்டே வந்த தனுஷ் கொக்கி குமாராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். 2006ம் ஆண்டு வெளியான புதுப்பேட்டை படத்தில் தன்னுடைய அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் தனுஷ். ஒல்லி நடிகர் என எழுதிய சில பேனாவும் கூட நடிப்புக்கு முன் உருவம் பெரிதல்ல என உணர்ந்த ஆண்டு அதுவாகத்தான் இருக்கும். அதற்குபின் கவனிக்கத்தக்க நடிகராக மாறிய தனுஷ் பொல்லாதவன் படம் மூலம் தன்னுடைய கால்தடத்தை அழுத்தமாக பதித்தார்.
தனுஷுக்கு சினிமாவாழ்க்கை கொடுத்து களத்துக்குள் இறக்கிவிட்டது செல்வராகவன் என்றாலும், தனுஷுக்குள் இருந்த நெருப்பொறியை சரியாக தட்டி எரிய வைத்த இயக்குநர் வெற்றிமாறன் தான்.தனுஷின் வெற்றியை வெற்றிமாறன் இல்லாமல் தனியாக எழுதிவிட முடியாது. தனுஷுக்குள் ஒரு அசுர நடிகன் இருப்பத்தை உலகுக்கு காட்டியவர் அவர். உடல் அசைவுகளால் அல்ல நடிப்பு கண்களில் இருக்கிறது என்பதை தனுஷ் உணரத்தொடங்கிய காலம் அது. தந்தையை அடித்த வில்லனை நேருக்கு நேராக நின்று மிரட்டும் காட்சிகளில் ஒரு மகனின் கோபத்தையும், ஆற்றாமையையும் நின்ற இடத்தில் இருந்து கண்கள் வழியாக அள்ளிவீசுவார் தனுஷ். இன்றும் பலருக்கு அது பேவரைட் சீன் தான்.
அதேபோல் ஆடுகளம். லுங்கி, கையில் சேவல் என தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டிருந்தார் தனுஷ். படத்திற்கான மொழி, காதல் காட்சிகள், சேவல் சண்டை காட்சிகள் என கிடைத்த பந்துகளை எல்லாம் சிக்ஸருக்கு விளாசி இருப்பார். அதனால்தான் தேசிய விருது அவரை தேடி வந்தது. இடையிடையே சீடன், மாப்பிள்ளை, வேங்கை, உத்தமபுத்திரன் என பல வகை படங்களை கொடுத்து வணிக ரீதியாக வெற்றி, தோல்விகளை கலவையாகவே பெற்றும் வந்தார். யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன போன்ற திரைப்படங்கள் தனுஷுக்கு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கின.
மயக்கம் என்ன திரைப்படத்தில், தன்னுடைய படைப்பு திருடப்பட்டதை அறிந்து பிரபலமான புகைப்படக்காரரிடம் நியாயம் கேட்க செல்லும், கோபத்தின் உச்சிக்கே செல்வார். ஆனால் எளியவர்களின் கோபம் அழுகையாய் மட்டுமே முடியும் என்ற கோணத்தில் சூழ்நிலைக் கைதியாய் அழுதுக்கொண்டே திரும்பிச்செல்வார் தனுஷ். அந்தக்காட்சியை பார்க்கும் அனைவருக்குள்ளும் எளிய படைப்பாளியின் வலியை திரை மூலம் கடத்தி இருப்பார். 3 திரைப்படத்தில் வரும் தற்கொலை காட்சி தனுஷின் நடிப்பு திறமைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.
வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் அம்மாவை பறிகொடுக்கும் இடைவெளி காட்சி, அசுரன் படத்தில் கையில் குத்தீட்டியுடன் பழைய அசுரனாக சீறிப்பாயும் இடைவெளி காட்சி என தனக்கான தளத்தில் தான் எதுவாக வேண்டுமானாலும் மாறுவேன் என சொல்லாமல் சொல்லுவார் தனுஷ். அசுரனில் மட்டுமே இருவேறு தனுஷை நம் கண் முன்னே கொண்டுவந்திருப்பார் வெற்றிமாறன். கோபம், வேட்கை என்ற ஒரு அனல் கக்கும் ஒரு தனுஷ். ஊர் மக்களின் காலில் விழும் காட்சிகளில் ஒரு தனுஷ். நடை, பேச்சு, கண்களில் சோகம் என அசுரன் படத்தில் பிள்ளையை இழந்த தனுஷுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அசுரனுக்கு முன்னதாக வெளியான வட சென்னை படத்தில் க்ளாஸ், மாஸ் என அசத்தி இருப்பார். சமீபத்தில் வெளியான கர்ணனிலும் தன்னுடைய நடிப்பில் ஒருபடி மேலே போய் இருக்கிறார்.
இதுதான் நாயகனா என்ற கேள்விகளுக்கு மத்தியில் திரைத்துறையில் காலடிபதித்த தனுஷ் இன்று பாலிவுட் தாண்டி ஹாலிவுட்டில் பறந்துகொண்டிருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி பாடலாசியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல்வேறு தளங்களிலும் தனுஷ் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமை. 19 ஆண்டுகளிலேயே நடிப்பின் உச்சம் தொட்டுள்ள தனுஷ் இனி வரும் ஆண்டுகளில் அசாத்திய சாதனைகளை செய்வார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.