விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது


மறைந்த நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை அறிவித்துள்ளது. முன்னதாக இந்த விருதுப் பட்டியலில் விஜயகாந்தின் பெயர் இடம்பெறவில்லை என்று தகவல் வெளியான நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நடிகர் விஜய்காந்தின் மனைவி விளக்கியபோது 3 முதல் 4 கட்டங்களாக இந்தத் தேர்வுகள் நடைபெறுவதால் சில குழப்பம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். 


இன்று மே 9ஆம் தேதி தலைநகர் டெல்லியில் மாலை 6:30 மணியளவில் இந்த விருது நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. கேப்டன் விஜயகாந்தின் பத்மபூஷன் விருதை அவர் சார்பாக மனைவி பிரேமலதா பெற்றுக் கொள்ள நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். விருது பெற்ற கையோடு டெல்லி தமிழ் சங்கம் சார்பாக மே 10ஆம் தேதி கேப்டன் விஜயகாந்துக்கு பாராட்டு விழா நடக்க இருப்பதாகவும் இந்த விழா முடிந்தது மே `11ஆம் தேதி தான் சென்னைக்கு திரும்பி நேரடியாக கேப்டன் கோயிலுக்குச் செல்ல இருப்பதாக அவர் தெரிவித்தார்.


மகிழ்ச்சி தெரிவிக்கும் பிரபலங்கள்


கேப்டன் விஜயகாந்துக்கு இன்று பத்மபூஷன் விருது வழங்கப்படும் நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் மகிழ்ச்சியை பதிவுகளின் வழியாகவும் வீடியோ வழியாகவும் பதிவு செய்து வருகிறார்கள். 


பிரபு வாழ்த்து






நடிகர் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “என் இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது கிடைப்பதில் ஒட்டுமொத்த திரையுலகத்துக்கே மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எங்கள் அன்னை இல்லம் சார்பாக கேப்டன் விஜயகாந்தின் குடும்பத்தினருக்கும் புரட்சிக் கலைஞரின் ரசிகர்களுக்கு வாழ்த்துகள்“ என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.


சத்யராஜ்


"இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும். யார் இந்த நபர் என்று ஊர் சொல்ல வேண்டும்“ என்று தனக்கும், விஜயகாந்துக்கும் பிடித்தமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளை சொல்லி நடிகர் சத்யராஜ் தனது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார்.