சென்னையில் நேற்று நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஹ்மானுக்கு இரண்டாவது முறை வந்த சோதனை
கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அன்றைய தினம் பெய்த கனமழையால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தண்ணீர் பெருமளவு தேங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள் ஒதுங்க கூட இடம் இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாயினர். இதனால் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு ஆறுதல் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான், நிகழ்ச்சி வேறொரு நாளில் நடக்கும் என அறிவித்தார்.
அந்த வகையில் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் மறக்குமா இசை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக கடந்த முறை மழையில் சிக்கிய ரசிகர்களுக்கு இம்முறை மழை பெய்தால் தற்காத்துக்கொள்ள ரெயின்கோட் வழங்கப்பட்டது. இதனால் பெரும் ஆர்வமுடன் இசை நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கு காரணம் அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் தான்.
கடுப்பான ரசிகர் கூட்டம்
ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ACTC events நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சி நடைபெறும் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் ஓ.எம்.ஆர். சாலையை பயன்படுத்துமாறு போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே மதியம் 2 மணியளவில் இருந்தே ரசிகர்கள் கார்களிலும், பைக்குகளிலும் வர தொடங்கியதால் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சாலையின் இருபுறம் நின்று சரிசெய்தாலும் பல மணி நேரமாக வாகன நெரிசல் ஏற்பட்டது.
காவல்துறை விசாரணை நடத்த திட்டம்
இது குறித்து காவல்துறை தரப்பில் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது இந்த நிகழ்ச்சிக்கான, ஏற்பாடுகள் குறித்து முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்ததாகவும், அதன் அடிப்படையில் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பல்வேறு குளறுபடிகளை செய்ததாக தாம்பரம் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தாம்பரம் காவல்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த போக்குவரத்து நெரிசலில் முதல்வர் கான்வாய் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை நடத்த, காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இசை நிகழ்ச்சி தேவைக்கேற்ப, போக்குவரத்து போலீசார் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கி வந்ததாகவும், ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் குளறுபடியாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
கார் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் தேவைக்கு ஏற்ப செய்யவில்லை எனவும், நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக அளவு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக, எழுந்துள்ள புகார் குறித்தும் விசாரணை செய்யப்படும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மன்னிப்பு கேட்ட ACTC events நிறுவனம்
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு ACTC events நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. திட்டமிட்டதை விட அதிக ரசிகர்கள் குவிந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும், அனைத்து விதமான சிரமங்களுக்கும் முழு பொறுப்பு ஏற்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது, தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.