தமிழ் சினிமாவின்  பன்முக கலைஞர்களில் ஒருவரான டி.ராஜேந்தர் மீண்டும் 21 ஆண்டுகளுக்குப் பின் இசையமைக்க வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


 “நான் கடைசி வரை தமிழன்” 


சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் புதுபுது முயற்சிகள் கையில் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது “நான் கடைசி வரை தமிழன்” என்ற படம் சுமார் 163 மொழிகளில்  உருவாகவுள்ளது. இந்த படத்திற்கு கதை,திரைக்கதை,வசனம் ,தயாரிப்பு, இயக்கம் என அனைத்தையும் எம்.ஏ.ராஜேந்திரன் மேற்கொள்கிறார். இந்த படத்திற்கு தமிழ் சினிமாவின்  பன்முக கலைஞர்களில் ஒருவரான டி.ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைக்கிறார். இதன் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பின் அவர் இசைத்துறையில் கம்பேக் கொடுக்க உள்ளார். 


இதையும் படிங்க: 'மூச்சுவிடும் நேரத்துக்குள் பகைவரால் அழிக்கப்படுவர்' - திருக்குறள் பகிர்ந்து வெற்றிமாறனை வாழ்த்திய விடுதலை படக்குழு


இதனிடையே இந்த படத்தின்  பூஜை மற்றும் படத்தின் பெயர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய டி.ராஜேந்தர், பல நிகழ்வுகளை பேசி வந்திருந்த அனைவரையும் ரசிக்க வைத்தார். அவர் தனது உரையில், “நான் நேற்று இரவு வரை ஹைதராபாத்தில் இருந்தேன்.   இந்த நிகழ்ச்சிக்கு வர காரணம் இறைவன் தான். இந்த இயக்குநரிடம் எனக்கு பிடித்தது பிடிவாதம் தான். அவரிடம் இந்த படத்துக்கு “உயிருக்கும் வரை தமிழன்” என்று பெயர் வைக்கலாமே என கேட்டேன். ஆனால் அவரோ, ‘நான் கடைசி வரை தமிழன்’ என்று பிடிவாதமாக இருந்தார். 


மீண்டும் இசையமைக்க என்ன காரணம்?


நான் பண்ணாரி அம்மன் படத்துக்குப் பிறகு இசையமைப்பதில்லை. நான் இந்த படத்துக்கு இசையமைக்க காரணம் அந்த டைட்டில் மட்டும் தான்.  அதில் “தமிழன்” என இருந்ததால் தான் இசையமைக்க முடிவு செய்தேன்.


ஏன் இசை அமைப்பதை நிறுத்தினேன் என்றால், சிச்சுவேஷனே இல்லாமல் பாட்டு வைக்கிறாங்க. பெரும்பாலும் ஆங்கில பாடல்களை வெட்டி ஒட்டுறது பாட்டு. வரியே கேட்காமல் சத்தம் மட்டுமே கேட்கும். சங்கீதமா? சத்தமா?... அப்படி என்றால் சாகித்தியம், சங்கீதம் என்றால் என்ன?. என்ன தாளம் போட்டாலும், அதனை மீறி ராகத்தில் இருக்கக்கூடிய சாகித்தியம் வெளிப்பட வேண்டும். 


என்னை யாரும் பாராட்ட வேண்டும் என நினைக்கவில்லை. என்னுடைய தாயோட பாராட்டு, தாலாட்டடை விட எதுவும் எனக்கு தேவையில்லை. பெரிய பெரிய படங்களின் நிகழ்ச்சிக்கு வரமாட்டேன். பெரிய தயாரிப்பாளர் வீட்டில் எல்லாம் போய் நிற்க மாட்டேன். யார் கிட்டேயும் கை கட்டி சான்ஸ் கேட்க மாட்டேன். இன்னைக்கும் நான் டிரம்ஸ் அடிப்பேன். ஏன் என்றால் நாம் தம் அடிக்க மாட்டேன். நான் குத்து பாட்டு போட்டால் கூட அதில் ஒரு அர்த்தம் இருக்கும்" என தெரிவித்தார்.


1980 ஆம் ஆண்டு வெளியான தனது முதல் படமான ”ஒரு தலை ராகம்” படத்தில் இருந்து 2002 ஆம் ஆண்டு வெளியான பண்ணாரி அம்மன் படம் வரை பல படங்களுக்கு இசையமைத்திருந்தார் டி.ராஜேந்தர். அதன்பிறகு 21 ஆண்டுகளாக எந்த படத்துக்கும் அவர் இசையமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  




மேலும் படிக்க: 17 மணி நேரத்தில் ஒரு கோடி வியூஸ்... விஷால், எஸ்.ஜே.சூர்யாவின் ‘மார்க் ஆண்டனி’ ட்ரெய்லர் சாதனை!