மக்கள் செல்வன் என்ற அடையாளம் நடிகர் விஜய் சேதுபதிக்கு அவ்வளவு எளிதில் கிடைத்து விடவில்லை. பல வகையான போராட்டங்கள், கடினமான உழைப்பு, காத்திருப்புக்கு பின்னரே அது நிஜமானது. இன்று தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமா, பாலிவுட் என இந்திய அளவில் பிரபலமான ஒரு நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி.  விஜய் சேதுபதியின் மகன் என்ற  அடையாளத்தோடு வராமல் தனக்கான திறமையை வைத்து ஹீரோவாக வாய்ப்பை தட்டி சென்றுள்ளார் அவரின் மகன் சூர்யா.


 



விஜய்சேதுபதி மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் படம் 'ஃபீனிக்ஸ் வீழான்'. பிரபல சண்டை இயக்குநர் அனல் அரசு இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தின்  பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.


தன்னுடைய தந்தை நடித்த சிந்துபாத், நானும் ரவுடி தான் படங்களில் ஒரு சிறிய ரோலில் வந்து போன சூர்யா முதல்முறையாக ஆக்ஷன் மற்றும் ஸ்போர்ட்ஸ் கலந்த ஜானரில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் அறிமுகமாகிறார். ராஜலட்சுமி அரசகுமார் தயாரிப்பில் சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தில் காக்கா முட்டை விக்னேஷ், 'அயலி' படம் மூலம் பிரபலமான அபி நக்‌ஷத்ரா, முத்துக்குமார் மற்றும் பலர் நடிக்கிறார்கள். 


இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்ட போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அழைத்து இருந்தனர் படத்தின் இயக்குநர் அனல் அரசு மற்றும் சூர்யா விஜய் சேதுபதி. "அப்பா நடித்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில் ஒரு நாள் அவருக்கு சாப்பாடு எடுத்து கொண்டு போகும் போது பைட் சீன் நடந்து கொண்டிருந்தது. எனக்கு ஆக்ஷன் மிகவும் பிடிக்கும் என்பதால் அப்படியே உட்கார்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன். அப்போது நான் சார் கண்ணில் நான் பட்டுவிட்டேன். அப்படி தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. எனக்கு ஆக்ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இப்போது அனல் சார் மூலமாக நிறைவேறப்போகிறது.  


அப்பா வேற நான் வேற. அவருடைய மகன் என்ற அடையாளத்தை எங்கும் உபயோகிக்க கூடாது என நினைக்கிறன். அதனால் தான் போஸ்டரில் கூட சூர்யா என்று தான் பெயர் இருக்கிறதே தவிர சூர்யா விஜய்  சேதுபதி என இல்லை. தற்போது பி.ஏ. ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு தான் படித்து வருகிறேன். அப்பாவோடு சேர்ந்து நடிப்பேனா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்" என பேசி இருந்தார் சூர்யா விஜய் சேதுபதி.


 



விஜய் சேதுபதி இந்த பூஜையில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வராதது ஏன் என்ற கேள்வி எழுந்தது. "விஜய் சேதுபதி இந்த பூஜை கலந்து கொள்வதாக தான் இருந்தார் ஆனால் அவர் மலேசியாவில் படப்பிடிப்புக்காக சென்றுள்ளதால் அவரால் வர முடியாமல் போனது. காலையில் கூட வீடியோ கால் மூலம் எங்களுக்கு வாழ்த்து சொன்னார்" என விளக்கம் கொடுத்தார் இயக்குநர் அனல் அரசு.  


"இந்த ஏஜ் குரூப்பில் உள்ள இளைஞர்களை வைத்து ஒரு ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட படம் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் எதிர்பார்த்த தகுதிகள் அனைத்தும் சூர்யாவுக்கு பொருத்தமாக இருந்தது. அதனால் தான் நான் அவரை தேர்வு செய்தேனே தவிர அவர் விஜய் சேதுபதியின் மகன் என்பதற்காக அல்ல " என கூறி இருந்தார் அனல் அரசு.