மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான கர்ணனை மையமாக வைத்து அடுத்தடுத்து வெளியாகும் பட அறிவிப்புகள் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக சூர்யா நடிக்க இருப்பதாக நீண்ட காலமாக பேசப்பட்ட ‘கர்ணா’ படமும், தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘மஹாவீர் கர்ணா’ படமும் ஒரே கதாபாத்திரத்தை மையமாக கொண்டிருப்பதால் இந்த குழப்பம் உருவாகியுள்ளது.
ராகவா லாரன்ஸ் நடிக்கும் மகாவீர் கர்ணா
இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘மஹாவீர் கர்ணா’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் இப்படத்தில் புராண கதாபாத்திரமான கர்ணன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருக்கிறார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகிறது. உலகம் முழுவதும் 2027-ம் ஆண்டு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சூர்யா கர்ணா என்கிற படத்தில் நடிக்க இருப்பதாக இருந்து பின் அந்த படம் கைவிடப்பட்ட நிலையில் ராகவா லாரன்ஸ் படத்தின் அறிவிப்பு சூர்யா ரசிகர்கள் இடையில் புது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா நடிக்கவிருந்த படமா ?
இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் உருவாகவிருந்த ‘கர்ணா’ படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாக செய்திகள் வெளியாகின. 2023-ம் ஆண்டு முதலே இந்த படம் தொடர்பாக சூர்யாவின் பெயர் பேசப்பட்டது. 2024-ம் ஆண்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூர்யாவும், இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவுடன் சந்திப்பு நடைபெற்றதாகவும், படம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த படம் உருவாக அதிக காலமும் தயாரிப்பும் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் 2026 ஜனவரியில் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, ‘கர்ணா’ படத்தின் திரைக்கதை முடிக்கப்பட்டுள்ளதாகவும், ஏ.ஆர். ரஹ்மான் சில பாடல்களை உருவாக்கியுள்ளதாகவும் கூறியிருந்தார். அதே நேரத்தில் அந்த படம் தற்போது இடைநிறுத்தத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. சூர்யாவின் தற்போதைய பங்கேற்பு குறித்தும் உறுதியான புதிய அறிவிப்பு வெளியாகவில்லை.
இதனால் சூர்யா நடிக்க இருந்ததாக பேசப்பட்ட ‘கர்ணா’ படமும், ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘மஹாவீர் கர்ணா’ படமும் ஒன்றா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் இரண்டும் வெவ்வேறு இயக்குநர்களின் தனித்தனி படங்கள் என்பதே தற்போதைய தகவல்களின் அடிப்படையில் தெளிவாகிறது.
