ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 45வது படத்தின் டைட்டில் இன்று காலை வெளியானது. படத்தின் போஸ்டரை பார்த்ததுமே ஒரு சிலர் இதில் அரசியல் குறியீடு இருப்பதாக பேசத் தொடங்கி விட்டனர். எப்போதும் சூர்யா படம் வெளியாகும் போது பல சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்திப்பது வழக்கமாகிவிட்டது. கங்குவா படத்தை பார்த்த பலர் இப்படத்தையா பார்க்க வந்தோம் என்ற அளவிற்கு கடுமையாக விமர்சித்திருந்தனர். அதேபோன்று ரெட்ரோ படம் வெளியான போதும் இதே பிரச்னை வெடித்தது. 

சூர்யா 45 பட தலைப்பு

ரெட்ரோ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கும்போதே சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிக்க இருக்கும் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.  இந்நிலையில், சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், இப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படத்திற்கு கருப்பு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. . இந்த அறிவிப்பு சமூக வலைதளத்தில் அறிவிக்கும் விதமாக போஸ்டர் ஒன்றையும் படக்குழு பகிர்ந்துள்ளது. இதில், கையில் பெரிய அரிவாளுடன் வேட்டி மற்றும் சட்டை அணிந்தபடி சூர்யா நிற்கிறார். அதன் பின்னணியில் அய்யனார் குதிரை மீது வீற்றிருக்கும் சிலை உள்ளது. இந்த போஸ்டரை வைத்து பார்க்கும் போது இந்தப் படம் கிராமத்து கதைக்களத்தை கொண்டிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நட்சத்திர பட்டாளம்

இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கின்றனர். ரெட்ரோ படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் கருப்பு படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் சூர்யா. இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் கார்டிலேயே அரசியல் கட்சியின் நிறம் இருப்பதாக ஒரு குரூப் திடீரென விமர்சிக்க தொடங்கியிருப்பது வேடிக்கையாக உள்ளது. 

மீண்டும் வெடித்த சர்ச்சை

சூர்யா நடிக்கும் படங்கள் வெளியானாலே சர்ச்சைதானா என்கின்ற அளவிற்கு பேசுபோருளாக மாறி வருகிறது. ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் தந்தை சிவகுமார் சிக்ஸ்பேக் குறித்து பேசியது சர்ச்சையானது. அதைத்தொடர்ந்து பலவித பிரச்னைகளும் எழுந்தன. சூர்யா வாடிவாசலில் எப்போது நடிப்பார் என தொடங்கி கங்குவா முதல் சூர்யாவின் ஒவ்வொரு படத்திற்கும் தலைவலியை சந்தித்து வருகிறார். ஆனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசம் படத்தின் தலைப்பு கருப்பு என பெயரிட்டது ஒரு கட்சியின் சித்தாந்தத்தை குறிப்பதாகவும், படத்தின் போஸ்டர் சிவப்பு நிறத்திலும் இருப்பதாகவும் பேசி வருகின்றனர் நெட்டிசன்கள். இவர்கள் நெட்டிசன்களா அல்லது ஒரு மதத்தின் கட்சியை சார்ந்தவர்களா என்றும் அவரது ரசிகர்கள் போட்டு பொளக்க தொடங்கிவிட்டனர். 

சூர்யாவை விட்டு விடுங்கள்

தற்போது படத்தின் டைட்டில் தான் வெளியாகியிருக்கிறது. இன்னும் படம் வெளியாக நாள் இருக்கிறது. அதற்குள் அரசியல் பிரச்னைகளை கிளப்பி சூர்யாவை வம்புக்கு இழுக்காதீர்கள் என அவரது ரசிகர்கள் அன்பு வேண்டுகோள் வைத்துள்ளனர். இருப்பினும் ஒரு சிலர் ரெட் ஜெயண்ட் இப்படத்தை வாங்காத போதும் இதில் அந்த குறியீடு இருப்பது சந்தேகத்தை எழுப்புவதாக கிசுகிசுக்க தொடங்கிவிட்டனர். சூர்யாவை அரசியலுக்குள் கொண்டு வர ஒரு குரூப் முயற்சிப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. கருப்பு என்பது தமிழரின் அடையாளம். அதில் என்ன அரசியல் இருக்க போகிறது என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.