ஜீ தமிழ் சேனலின் சர்வைவர் நிகழ்ச்சி எட்டாவது எபிசோடை எட்டியுள்ளது. வித்தியாசமான விதிமுறைகள் பரபரப்பான ஆட்டமாக மாற்றியுள்ளது. ஏற்கனவே டாஸ்கில் தோற்றதால் காடர் அணியை ட்ரைப் பஞ்சாயத்திற்கு அர்ஜூன் அழைத்திருந்தார். இந்நிலையில் எலிமினேசனுக்கு ஒருவரை பரிந்துரைக்கலாம் என்று ஏற்கனவே அர்ஜூன் கூறியிருந்தார். இந்நிலையில் அங்கு சென்று அனைவரிடமும் நடந்தது என்ன என்று கேட்டார் அர்ஜூன். அவ்வளவு தான் தாமதம்... ஒவ்வொரு வரும் பொங்க ஆரம்பித்தனர். குறிப்பாக லீடர் காயத்ரி மீது அனைவரும் குறைகளை அள்ளி வீசினர். அதை அவரே எதிர்பார்க்கவில்லை. 



இறுதியில் ஓட்டெடுப்பில் காயத்ரி பெயரும் இடம் பெற்றது. அதையும் அவர் எதிர்பார்க்கவில்லை. அதிக ஓட்டுகள் காயத்ரி வசம் விழுந்தது. இதனால் காயத்ரி வெளியேறும் சூழல் உருவானது. அப்போது அர்ஜூன் ஒரு ஆஃபர் தந்தார். 5 சிலம்பங்கள் வைக்கப்பட்டது. அதில் ஏதாவது ஒன்றை எடுத்து உடைக்குமாறு காயத்ரியிடம் கூறினார் அர்ஜூன். தங்க முத்து வந்தால் எலிமினேசன் இல்லை என்றும் வெள்ளி வந்தால் எலிமினேசன் என்றும் கூறினார். ஆனால் காயத்ரி எடுத்ததில் வெள்ளி வந்தது. இதைத் தொடர்ந்து அவர் வெளியேற்றப்பட்டார். வெளியேறும் முன் அவரது வெளியேற்றம் குறித்து ஒரு குறிப்பு எழுதுமாறு அர்ஜூன் கேட்டுக்கொண்டார். வெளியேற்றப்பட்ட காயத்ரி வீட்டுக்கு அனுப்பப்படுவாரா... இல்லை ஏற்கனவே தனித்தீவில் உள்ள சிருஷ்டி, இந்திரஜாவிடம் செல்வாரா என்பதே இன்றைய பரபரப்பான எபிசோட்....






இன்றைய சர்வைவர் எபிசோட் 8 ல் நடந்தவை இதோ இதோ...


போட்டு வாங்கிய அர்ஜூன்!


காயத்ரியை அழைத்து டாஸ்க் ஏரியா ஒன்றில் அர்ஜூன் அவரின் கருத்துக்களை கேட்டார். ‛வெற்றி பெறவில்லை என்றாலும் டாப் 3ல் இருப்பேன் என்று நினைத்தேன். ஆனால் முதல் ரவுண்டில் வெளியேற்றப்படுவேன் என்று நினைக்கவில்லை. லேடி கேஷ், ராம் ஆகியோர் எனக்கு ஓட்டு போட்டிருக்க மாட்டார்கள். என்று நினைக்கிறேன். என்று அவர் கூறினார். காயத்ரி எலிமினேஷனை பார்த்ததும் ‛வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்று தனக்கு தோன்றியது என்று இந்திரஜா கூறினார். ட்ரைப் லீடரா காயத்ரி ஒரு இடத்தில் தவறிவிட்டார் என்று அர்ஜூன் முன்பு இந்திரஜா குறை கூறினார். நான் இருந்தாலும் அதே காரணத்திற்காக தான் நாமினேஷன் செய்திருப்பேன் என்றார். பின்னர் சிருஷ்டியிடம் கேட்ட போது, ‛லட்சுமி ப்ரியாவை நான் அக்காவாக நினைத்தேன். ஆனால் அவர் என்னை ஓட்டளித்தார். அது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதை ஜீரணிக்கமுடியவில்லை, ’ என்று வருத்தம் தெரிவித்தார் சிருஷ்டி. 


மூன்றாம் உலகம் தீவு!






வெளியேற்றப்பட்ட 3 பேரும் மூன்றாம் உலகம் என்கிற தீவில் இருப்பீர்கள் என்று அர்ஜூன் அறிவித்தார். அதில் நடக்கும் டாஸ்கில் தோற்போர் வெளியேற வேண்டும் என்று கூறி அவர்களிடமிருந்து விடை பெற்றார் அர்ஜூன். காயத்ரி தன்னை நாமினேட் செய்ததால் அவருடன் மோத ஒரு வாய்ப்பு கிடைத்ததாக இந்திரஜா சபதம் எடுத்தார். மூன்றாவது உலகம் தீவில் எந்த பழங்கள் கொண்ட மரமும் இல்லை. சாப்பாட்டிற்கான வழியும் இல்லை. எனவே மூவருக்கும் அங்கு வசிப்பது சவாலான விசயமாகவே இருக்கும். ஆனால் அவர்களின் எண்ணம் பொய்த்து போனது. ஒரு குகையின் கீழ் சமையலுக்கு தேவையான பொருட்கள் இருந்தன. அதை கண்டதும் காயத்ரி மகிழ்ச்சியில் துள்ள, சிருஷ்டி அவற்றை மேலிருந்து பெற்றுக்கொண்டார். பின்னர் மூவரும் சேர்ந்து சமையக்க தொடங்கினர்.


இந்திரஜாவின் திமிர்  பேச்சு!




சமைக்கும் போது வெளியேற்றம் குறித்து காயத்ரி பேசும் போது, இந்திரஜாவிற்கு ஏன் ஓட்டளித்தேன் என்று பேசினார். அப்போது இந்திரஜா-காயத்ரி இடையே மோதல் ஏற்பட்டது. ‛என்னால ஒருத்தவர் பிழைத்து போகட்டும் என விட்டுக்கொடுத்து வந்தேன்’ என்று திமிராக பேசினார் இந்திரஜா. இதற்கிடையில் ஒரு ஓலை வந்தது. மூவரில் இருவர் மட்டும் ஒரு டாஸ்கில் பங்கேற்க வேண்டும். அது யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இரவானதும், டாஸ்க் நடைபெறும் பகுதிக்கு மூவரும் வந்தனர்.




அவர்களிடம் மூன்றாவம் உலகம் தீவு குறித்து அர்ஜூன் கேட்டறிந்தார். ‛அங்கு பேசியதில் பல உண்மைகள் எனக்கு தெரியவந்ததாக’ இந்திரஜா அர்ஜூனிடம் கூறினார். விஜயலட்சுமி தனக்கு எதிராக ஓட்டளித்த விபரத்தை அறிந்து அவர் வருந்தியதாக கூறினார். அதன் பின் போட்டியாளர் இருவர் யார் என கேட்க, அவர்கள் யார் என்று முடிவு செய்யவில்லை. எனவே அதற்கு ஒரு போட்டி வைத்து அதில் இருவரை தேர்வு செய்தார் அர்ஜூன். அதில் இந்திரஜா கருப்பு கல் ஒன்றை எடுத்து தப்பித்தார். வெள்ளை கல்லை எடுத்த சிருஷ்டியும்-காயத்ரியும் போட்டிக்கு களத்திற்கு வந்தனர். 




சின்ன கட்டைகள் கொடுத்து, அவற்றை பல லேயர்களாக அடுக்க வேண்டும். அது தான் போட்டி. தொடர்ந்து அவர்கள் இருவரும் அடுக்குகளாக கட்டையை அடுக்கும் வேலையை  தொடங்கினர். ஆனால் அவர்கள் அதை நிறைவு செய்ய திணறினர். அதன் பின் ஒரு கட்டை கொடுத்து அந்த அளவிற்கு கட்டையை அடுக்க வேண்டும் என்று அர்ஜூன் உதவி கட்டை ஒன்றை இருவருக்கும் வழங்கினார். அதை வைத்து காயத்ரி விரைவில் அடுக்கத் தொடங்கினார். ஆனால் சிருஷ்டி தடுமாறினார். சிறப்பாக அடுக்கிய காயத்ரி அனைத்தையும் நிறைவாக செய்து முடித்தார். இதன் மூலம் அந்த டாஸ்கில் காயத்ரி வெற்றி பெற்றார்.




தோல்வியடைந்த சிருஷ்டி தீவில் இருந்து வெளியேற வேண்டும் என்று அர்ஜூன் கூறினார். வெளியேற்றம் தனது வேதனை அளிப்பதாக சிருஷ்டி வருந்தினார். தனது பேண்ட்டை எரியும் தீயில் எரித்துவிட்டு அங்கிருந்து புறப்படுமாறு சர்வைவர் விதிகளின் படி சிருஷ்டியிடம் கூறப்பட்டது. அதன் படி அவர் தனது பேண்டை தீயிட்டு எரித்து, சக போட்டியாளர்களை ஆரத்தழுவி அங்கிருந்து விடைபெற்றார். மற்ற இருவரான காயத்ரி-இந்திரஜா ஆகியோர் மீண்டும் மூன்றாம் உலகம் தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 


நான் லீடர் ஆகனும்... பார்வதி அடம்!




இதற்கிடையில் அடுத்த லீடர் யார் என்கிற ஆலோசனையில் வேடர் அணி ஈடுபட்டது. தான் விரும்புவதாக பார்வதி தன் விருப்பத்தை தெரிவித்தார். ஆனால் அவர் தலைமையை அங்கிருப்பவர்களில் பெரும்பாலானோர் விரும்பவில்லை. பார்வதியை இரண்டாவது ஆப்சனில் வைக்கலாம் என்று ஒருவர் முன்னெடுக்க, அதை நந்தா, லெட்சுமி ஆகியோர் விரும்பவில்லை என்று கூறிவிட்டனர். ஆனால் அது பார்வதிக்கு புரிந்ததால், அவர்களின் எண்ணத்தை புரிந்து கொண்டதாக பார்வதி கூறினார். தன்னை அனைவரும் ஒதுக்குவதாக பகிரங்கமாக அறிவித்த பார்வதி. அதற்காகவே நான் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்றார். நாளை யார் லீடர் என்பதற்கான போட்டி பரபரப்பாக நடைபெற உள்ளது.