ஜீ தமிழ் சேனலில் தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியின் ஐந்தாம் நாள் எபிசேட் இன்று ஒளிப்பரப்பானது. ஆர்.ஜே.பாரு என்கிற பார்வதியின் டாமினேஷனில் கடந்த மூன்று நாட்களாக கலகலத்த வேடர் கூடாரம், நேற்று அமைதியானது. மாறாக அமைதியாக இருந்த காடர் கூடாரம் நான்காம் நாளான நேற்று வேற லெவலில் இருந்தது. அணித் தலைவர் காயத்ரி-விக்ராந்த் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக காடர் அணியில் பெரிய அளவில் பிளவு ஏற்பட்டது. குறிப்பாக அணித்தலைவர் காயத்ரியின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்திரஜாவில் தொடங்கி விஜயலட்சுமி வரை பெண்கள் உள்ளிட்ட அனைவரும் காயத்ரியின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தனர்.
நேற்று தங்களின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொள்ளும் டாஸ்க் வழங்கப்பட்டது. அனைவரும் போட்டி போட்டி அழுது புலம்பி தங்கள் வாழ்க்கை குறிப்பை கூறினர். இந்நிலையில் முக்கியமான இரண்டாவது டாஸ்க் நேற்று ஓலை மூலம் வந்தது. அதில் பலவீனமாக ஒருவரை அணியினர் தேர்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது . அது ஒரு டெர்மினேட் டாஸ்க் என்பதால், பலரும் தங்கள் பெயர் வருமோ என்கிற அச்சத்தில் உள்ளனர். ஆனாலும் பார்வதி மட்டும் என் பெயர் தான் வரும் என தில்லாக கூறி போட்டியை எதிர்நோக்க தயாராக உள்ளார். அந்த வகையில் இன்றைய 5வது நாள் எபிசோடில் நடந்தவை இதோ...
வேடர் அணியில் பலவீனமானவர் என்கிற முறையில் சிருஷ்டி பெயரை அஜ்மல் முன் வைக்கிறார். அவர் போட்டியில் இருந்து விலகுவதால் அவருக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது என்கிற கருத்தையும் லீடர் லெட்சுமியிடம் முன் வைக்கிறார். அதே போல காடர் அணியில் இந்திரஜாவை பலவீனமானவர் என அவருடன் இருக்கும் விஜயலட்சுமியே முன்மொழிகிறார். ஆனால், இந்துஜாவுடன் விஜயலட்சுமி பெயரை ராம் பரிந்துரைக்கிறார். விஜயலட்சுமி அவரது மகனை எண்ணி வருந்துகிறார் என்கிற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இப்படியாக இருதரப்பும் மாறி மாறி ஒருவர் பெயரை சொல்லி முன்மொழித்து, அதற்காக ஒதுக்கப்பட்ட குடுவையில் பெயர்களை எழுதி போட்டனர்.
லீடருக்கு சீக்ரட் அட்வான்டேஜ்!
இந்நிலையில் லீடர் என்கிற முறையில் லெட்சுமிக்கு ஒரு ரகசிய ஓலை வருகிறது. அதில் அடுத்த 3 ரிவார்ட்டு சேலன்ஜில் எதிரணி ரிவார்டு ஜெயிக்கும் போது, அவர்களுக்கு வழங்கப்படும் பொருளில் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இதை ஐஸ்வர்யா உடன் மகிழ்வோடு பகிர்ந்து கொண்டார் லட்சுமி. ஆனால் அது எந்த மாதிரியான விளைவை தரும் என்பதை பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் லீடர்கள் இருவரும் அர்ஜூனை சந்திக்க அழைப்பு வந்தது. அவர்களும் புறப்பட்டுச் சென்றனர்.
குதிரை கதை கூறி ஓட்டளிக்க வைத்த அர்ஜூன்!
தன்னை சந்திக்க வந்த லீடர்களிடம் குழுவினர் பற்றி அர்ஜூன் கேட்டார். தங்களுக்கு உணவு கிடைத்தது, தூங்க இடம் கிடைத்தது. குழுவாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றார் லெட்சுமி. நாங்களும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றார் காடர் அணி லீடர் காயத்ரி. குதிரைகள் சவாரியில் ஒரு குதிரை பலவீனமாக இருந்தால், அந்த குதிரையை விலக்கிவிட்டு செல்வீர்களா, அல்லது அரவணைத்து செல்வீர்களா என்று அர்ஜூன் கேட்ட போது, நான் இணைத்துக்கொள்வேன் என்று காயத்ரி கூறினார். லெட்சுமி மலுப்பலான பதில் அளித்தார். திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில், பலவீனமான ஒருவருக்கு ஓட்டளிக்குமாறு லீடர்களை கேட்டுக்கொண்டார். அவர்களும் வேறு வழியின்றி ஓட்டளித்தனர்.
காடர் அணியில் ராம்...!
பின்னர் இரு அணிகளும் படகில் அர்ஜூன் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்களிடம் வழக்கம் போல அனுபவத்தை கேட்டபின், நேற்று நடந்த டாஸ்கில் யார் கூறிய அவர்களின் கதை பிடித்திருந்தது எனக்கேட்டார். இதற்கிடையில் பெசன்ட் ரவியின் 25வது திருமண நாள் வாழ்த்து கூறப்பட்டது. பின்னர் ஓட்டுகள் எண்ணப்பட்டு, காடர்கள் தரப்பில் பதிவான முடிவை தெரிவித்தார் அர்ஜூன். அதில் இந்திரஜாவிற்கு 2 ஓட்டுகளும், ராம் 5 ஓட்டுகளும் பெற்றனர். அர்ஜூன் அறிவித்ததும், ராம் மனம் உடைந்து அழுதார். என்னை புரிந்து கொள்ளவில்லை என்று தன் ஆதங்கத்தை கூறினார்.
வேடர் அணியில் பார்வதி...!
அடுத்ததாக வேடர்கள் அணியின் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதில் அதிகமாக பார்வதிக்கு 4 ஓட்டுகள் அவரை வீக் என்று ஓட்டளித்தனர். அவருக்கு அடுத்ததாக சிருஷ்டி 3 ஓட்டுகள் பெற்றிருந்தார். ‛தான் எல்லா டாஸ்கும் சரியாக செய்ததாகவும், எனது கருத்தை ஒத்துக்கொள்ள முடியாமல், எனக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர்,’ என்று பார்வதி அர்ஜூனிடம் கூறினார். உண்மையா என அம்ஜத்திடம் அர்ஜூன் கேட்டார். அதற்கு அவர் அளித்த பதிலை, கேமராவிற்காக நடிக்கிறார் என பார்வதி கூறினார். அதே காரணத்தை சிருஷ்டியிடம் கேட்ட போது, ‛எனக்கு எல்லாமே புதிதாக உள்ளது...’ என தன் வருத்தத்தை கோபமாக பதிவு செய்தார்.
புதிய குண்டு போட்ட அர்ஜூன்!
இந்நிலையில் இந்த ஓட்டு மட்டும் போதாது, டீம் லீடர்கள் யாருக்கு ஓட்டளித்தார்களோ அவர்கள் தான் எலிமினேட் ஆவார்கள் என அர்ஜூன் கூறவும் அனைவரும் அதிர்ந்து போயினர். லட்சுமி ப்ரியா அளித்த ஓட்டில் சிருஷ்டி பெயர் இருந்தது. இதனால் சிருஷ்டி போட்டியில் இருந்து வெளியேறுவார் என்று அர்ஜூன் அறிவித்தார். ‛லட்சுமி தனக்கு ஓட்டளிப்பார் என்று நான் நினைக்கவில்லை...’ என்று தன் கருத்தை சிருஷ்டி வைத்தார். பின் காடர்கள் லீடர் காயத்ரி அளித்த ஓட்டில் இந்திரஜா பெயர் இருந்தது. இதன் மூலம் அவர் வெளியேறுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி காடர் அணியில் இந்திரஜாவும், வேடர் அணியில் சிருஷ்டியும் படகு மூலம் தீவில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களின் வெளியேற்றம் குறித்து சக போட்டியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
தனித்தீவில் சிருஷ்டி-இந்திரஜா!
வெளியேற்றப்பட்ட இருவரும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று நினைக்கப்பட்ட நிலையில், அவர்கள் வேறு ஒரு தீவில் விடப்பட்டனர். அங்கு ஒரு ஓலை இருந்தது. அதில் இன்னும் போட்டி முடியவில்லை என்று கூறியிருந்தது. அதைப்பார்த்த இந்திரஜாவும், சிருஷ்டியும் சிரித்தபடி மகிழ்ந்தனர். அதன் பின் காடர் கூடாரம் காட்டப்பட்டது. வெளியேற்ற ஓட்டெடுப்பு குறித்த விவாதம் அது. அதிலும் காயத்ரி-விக்ரம் இடையே மோதல். நாளை கடலில் சுவாரஸ்யமான டாஸ்க் உள்ளது. பார்க்கலாம் சர்வைவர் 6வது எபிசோட் எப்படி என்று...!