நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக 'கருப்பு' திரைப்படம் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால் சூர்யாவின் மார்க்கெட் சரிந்துவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. ஆனால், 'கருப்பு' திரைப்படத்தின் வெற்றி அந்த நிலையை முற்றிலுமாக மாற்றியுள்ளது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் வியாபாரம் புதிய உச்சத்தை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Continues below advertisement

சினிமா வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களின்படி, 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் மொத்த ப்ரீ-ரிலீஸ் பிசினஸ் ₹300 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் படம் வெளியாகும் முன்பே இவ்வளவு பெரிய அளவில் வியாபாரம் நடந்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதில், படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் சுமார் ₹85 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனுடன் செயற்கைக்கோள், இசை, வெளிநாட்டு வெளியீட்டு உரிமைகள் உள்ளிட்ட அனைத்து உரிமைகளின் மதிப்பையும் சேர்த்து கணக்கிடும்போது, படத்தின் மொத்த ப்ரீ-ரிலீஸ் பிசினஸ் ₹300 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் படம் வெளியாகும் முன்பே தயாரிப்பாளருக்கு குறைந்தபட்சம் ₹100 கோடி லாபம் கிடைக்கும் என்றும், வெளியீட்டுக்குப் பிறகு உலகளாவிய வசூல் மற்றும் விநியோக ஒப்பந்தங்களைப் பொறுத்து இந்த லாபம் மேலும் அதிகரிக்கும் என்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Continues below advertisement

அஜித் படங்களுக்கு தமிழ் திரைத்துறையில் இருந்த மார்கெட்டை சூர்யாவின் படம் எட்டியுள்ளது. கருப்பு படத்தின் வெற்றி சூர்யாவின் அடுத்தடுத்த படங்களின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. 

'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.