தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சூர்யா. தன்னுடைய அயராத உழைப்பால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தன்னை உயர்த்திக் கொண்டவர் சூர்யா. நந்தா படத்திற்கு பிறகு சூர்யாவின் திரை வாழ்வை அவரது உயரத்திற்கு கொண்டு சென்றே இருந்தது.
உச்சத்தில் இருந்த சூர்யா:
நந்தா, மெளனம் பேசியதே, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், ஆயுத எழுத்து, கஜினி, சில்லுனு ஒரு காதல், வேல் என குடும்பங்கள், இளைஞர்கள் கொண்டாடும் கதாநாயகனாக உருவாகியவருக்கு வாரணம் ஆயிரம் படம் முன்னணி நடிகரில் இருந்து உச்சநட்சத்திரமாக சூர்யாவை தூக்கிச் சென்றது. அந்த படத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் அதிக பெண் ரசிகைகள் கொண்ட நடிகராக சூர்யா உருமாறினார்.
அதன்பின்பு அயன், ஆதவன் என ஆக்ஷன் அவதாரத்திலும் கொடிகட்டிய சூர்யாவை சிங்கம் படம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய வசூல் சக்கரவர்த்தியாக மாற்றிக்காட்டியது. ஏ சென்டர் முதல் சி சென்டர் வரை மாபெரும் வசூல் ஈட்டிய இந்த படம் விஜய், அஜித்திற்கு நிகராக ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை சூர்யா சிங்கம் படத்திற்கு பிறகு கூட்டினார். இதன் காரணமாகவே கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் விஜய், அஜித்துடன் இணைந்து ஒரே மேடையில் சூர்யாவும் பங்கேற்றார்.
அஞ்சானில் விழுந்த அடி:
சிங்கம், ஏழாம் அறிவு, சிங்கம் 2 என சூர்யா தயாரிப்பாளர்களின் முதல் தேர்வாக மாறியிருந்தார். மிகப்பெரிய ஏறுமுகத்திற்குச் சென்ற சூர்யாவிற்கு அதளபாதாளமாகிற மாறியது 2014ம் ஆண்டு வெளியான அஞ்சான் படம். இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் அந்தாண்டு வெளியான படங்களிலே மிகப்பெரிய தோல்விப்படமாக மாறியது.
மிக கடுமையான விமர்சனங்களுடன் படுதோல்வியை அஞ்சான் சந்தித்ததற்கு படத்தின் ப்ரமோஷனுக்காக இயக்குனர் லிங்குசாமி கூறிய கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்கிருக்கேன் என்று கூறியதே காரணமாக மாறியது. இதையடுத்து, சூர்யா நடித்த மாஸ் என்கிற மாசிலாமணி, 24, தானா சேந்த கூட்டம், என்ஜிகே, காப்பான் என அடுத்தடுத்து தோல்வி படங்களாகவே சூர்யாவிற்கு அமைந்தது. செல்வராகவன், கேவி ஆனந்த், வெங்கட்பிரபு ஆகிய இயக்குனர்களுடன் இணைந்தும் அவரால் வெற்றிப்பாதைக்குத் திரும்ப முடியவில்லை. 2014ம் ஆண்டு வெளியான அஞ்சானின் தாக்கம் 2019ம் ஆண்டு வரை நீடித்தது.
கவலை தந்த கம்பேக்:
உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கிய தருணத்தில் 2020ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கிய இந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால், ஓடிடியில் வெளியாகியதே சூர்யா ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. இந்த படம் திரையரங்கில் ரிலீசாகியிருந்தால் தனது கம்பேக்கை சூர்யா மிரட்டலாக பதிவு செய்திருப்பார். இதையடுத்து, சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் சூர்யாவிற்கு பெரும் புகழையும், பெயரையும் பெற்றுத் தந்தது. ஆனால், இந்த படமும் ஓடிடி-யில் ரிலீசாகியது.
அடுத்தடுத்து ஓடிடியில் மாபெரும் ப்ளாக்பஸ்டர் வெற்றியுடன் திரையரங்கில் அடியெடுத்து வைத்த சூர்யாவிற்கு மீண்டும் தோல்வியே பரிசாக இருந்தது. 2022ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் தோல்விப்படமாக அமைந்தது. கடைக்குட்டி சிங்கம் போல வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்த்த நிலையில், பெரிய வரவேற்பை பெறாமல் தோல்வி அடைந்தது.
காலை வாரிய கங்குவா:
ஆனால், கமலின் விக்ரம் படத்தில் சூர்யா கிளைமேக்சில் வந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் சூர்யாவிற்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. இதன்பின்பு, கடந்தாண்டு மாபெரும் எதிர்பார்ப்புடன் மிகப்பெரிய பொருட்செலவில் உருவான சூர்யாவின் கங்குவா படம் ரிலீசானது. படத்தின் தயாரிப்பாளர்கள் இந்த படம் 1000 கோடி ரூபாய் அடிக்கும், 1000 கோடி ரூபாய் அடிக்கும் என்று அதீத பில்டப்களை படத்திற்காக கதைகட்டி விட்டதே படத்திற்கு மிகப்பெரிய சரிவாக மாறியது.
திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வு உள்ளிட்ட சில காரணங்களால் தொழில்நுட்ப ரீதியாக மிக கடினமான உழைப்பால் .உருவான கங்குவா படம் நியாயமாக பெற்றிருக்க வேண்டிய வெற்றியைக்கூட பெற முடியாமல் தோல்வியைத் தழுவியது. ஆனால், படம் ஓடிடி-யில் ரிலீசான பிறகு படம் விமர்சிக்கப்பட்ட அளவிற்கு மோசம் இல்லை என்றே கூறினார்.
இந்த நிலையில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படம் வரும் 1ம் தேதி ரிலீசாகிறது. இந்த படம் சூர்யாவிற்கு வெற்றிப்பாதைக்கான அச்சாரத்திற்கு வழிவகுக்குமா? அல்லது மீண்டும் சரிவில் கொண்டு சேர்க்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜொலிக்குமா ரெட்ரோ?
கங்குவா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கொடுக்கப்பட்ட அதிக பில்டப்பே படத்திற்கு பின்விளைவாக அமைந்ததால் இந்த படத்திற்கு படக்குழு பெரியளவில் ஏதும் பேசவில்லை. ஆனாலும், சூர்யாவின் தந்தை சிவக்குமார் சூர்யாவிற்கு முன்பு சிக்ஸ்பேக் வைத்தவர் யாரு? என்று பேசியது மிகப்பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது. சூர்யாவிற்கு முன்பு தனுஷ், விஷால் உள்ளிட்ட நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்துள்ள புகைப்படத்தை பலரும் பகிர்ந்தனர்.
இந்த சூழலில், வரும் 1ம் தேதி ரிலீசாக உள்ள ரெட்ரோ திரைப்படம் நடிகர் சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமையுமா? அவரை மீண்டும் வெற்றிப்பாதைக்கு திருப்புமா? என்ற எதிர்பார்ப்பை அவரது ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.