பெங்களூரைச் சேர்ந்த பிரபல நடனக் குழுவான Crew 8e1  அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் Body Rock USA 2026 World Finals போட்டிக்கு தேர்வாகியுள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்ள தங்களிடம் 35 லட்சம் தேவைப்படுவதாக ஆதரவு கேட்டு இந்த குழு வீடியோ வெளியிட்டிருந்தது. இதனைப் பார்த்த விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி அவர்களின் பயனம் மற்றும் தங்குமிடத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துகொடுத்துள்ளார். 

Continues below advertisement

நடிகர் விஜய் சேதுபதியைத் தொடர்ந்து அவரது மகன் சூர்யா சேதுபதியும் திரைத்துறைக்குள் நுழைந்துள்ளார். கடந்த ஆண்டு ஃபீனிக்ஸ் வீழான் திரைப்படத்தின் மூலம் சூர்யா சேதுபதி  நாயகனாக அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. பொதுவாக பெரிய நடிகர்களின் வாரிசுகள் சினிமாவிற்குள் வருகையில் அவர்கள் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்வது வழக்கம். அதேபோல் சூர்யா சேதுபதியும் ஆரம்பம் முதலே விமர்சனங்களை சந்தித்து வருகிறார்

பேட்டி ஒன்றில் 'அப்பா வேற  நான் வேற ' என அவர் பேசிய கருத்து பரவலாக விமர்சனம் செய்யப்பட்டது. அதேபோல் ஃபீனிக்ஸ் படத்தின் திரையிடலின் போதும் சிக்லெட் சாப்பிட்டுக்கொண்டே ரசிகர்களை சந்தித்ததற்காக அவரை கடுமையாக ட்ரோல் செய்தார்கள். இப்படி சின்ன சின்ன விஷயங்களுக்கு விமர்சனங்களை சந்தித்து வந்த சூர்யா சேதுபதியை தற்போது அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த பிரபல நடனக் கூழு அமெரிக்காவில் நடைபெற  இருக்கும் சர்வதேச நடனப் போட்டியில் கலந்துகொள்ள அவர் செய்துள்ள உதவியே இந்த பாராட்டுகளுக்குக் காரணம் 

Continues below advertisement

நடனக்குழுவுக்கு சூர்யா சேதுபதி செய்த உதவி 

பெங்களூரைச் சேர்ந்த Crew 8e1நடனக்குழு அண்மையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற Body Rock Asia 2026 தகுதிச் சுற்றில் வெற்றிபெற்றது. அடுத்தபடியாக ஜூலை மாதம் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் Body Rock USA 2026 World Finals போட்டிக்கு இந்த 16 பேர் கொண்ட குழு தேர்வாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த சாண்டி சுந்தர் இந்த நடனக் குழுவிற்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார். அமெரிக்காவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ளவும் அங்கு தங்குவதற்காகவும் தங்களுக்கு 35 லட்சம் தேவைப்படுவதாகவும் தங்களுக்கு உதவும்படியும் இந்த குழு தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டனர். இதனைப் பார்த்த சூர்யா சேதுபதி தன்னால் முடிந்த உதவிகளை அந்த அணிக்கு செய்து கொடுத்துள்ளார். அதேபோல் நடனக் கலைஞர்களுக்கு விசா கிடைப்பதில் இருந்த பிரச்சனைகளையும் சூர்யா சேதுபதி சரிசெய்து கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய் சேதுபதி சினிமாவிற்கு உள்ளும் வெளியேயும் பல வித உதவிகளை செய்து வருகிறார். தனது தந்தையைப் போல் சூர்யா சேதுபதி இந்த வயதிலேயே மற்றவர்களுக்கு உதவி செய்வது பாராட்டிற்குரிய விஷயமாக கருதப்படுகிறது .