கமல்ஹாசனுக்காக மட்டுமே ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததாக மனம் திறந்து கூறியுள்ளார் நடிகர் சூர்யா.
நடிகர் கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகி மிகப்பெரும் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியைப் பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்த விக்ரம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அனிருத் இசையமைத்திருந்த விக்ரம் படம் உலகளவில் ரூ.400 கோடிக்கும் வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்தது. இதுவரையில் தமிழ் சினிமா வரலாற்றில் அதிகப்படியான வசூலை ஈட்டிய திரைப்படமாக திகழ்கிறது ’விக்ரம்’ திரைப்படம்.
இந்தப் படத்தில் கொடூர வில்லனாக கடைசி சில நிமிடஙக்ள் திரையில் தோன்றி மாஸ் காட்டியிருப்பார் நடிகர் சூர்யா. இதுவரை அவர் தோன்றாத கதாபாத்திரம். யாருமே சற்றும் எதிர்பார்த்திராத கதாபாத்திரத்தை செய்திருப்பார் சூர்யா. ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைத்த அபார வரவேற்பை அடுத்து நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ரூ.47 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்சை நடிகர் சூர்யாவுக்குப் பரிசாக கொடுத்திருந்தார்.
இந்நிலையில் அண்மையில் நடந்த 2022 ஃபிலிம் ஃபேர் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சூர்யா. விழாவில் அவருக்கு சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. அவர் அந்த விருதை வாங்க மேடையேறி வந்தபோது ரசிகர்கள் ரோலக்ஸ், ரோலக்ஸ், ரோலக்ஸ் என்று உற்சாகக் குரல் எழுப்பினார்கள். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரமேஷ் அரவிந்த், சூர்யாவிடம் ரோலக்ஸ் மீண்டும் திரைக்கு திரும்புவாரா என்று கேள்வி கேட்டார். அதற்கு சூர்யா, இதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்றார். மேலும் அவர் கூறுகையில், ஒருவேளை ரோலக்ஸ் கதாபாத்திரம் என்னைத் தேடிவந்தால் அதைச் செய்வேன் என்றார்.
இதனைக் கேட்டு அரங்கமே உற்சாகத்தில் அதிர்ந்தது. ரோலக்ஸ் கதாபாத்திரம் பற்றி மேலும் அவர் பேசும்போது, ”நான் அந்த கதாபாத்திரத்தை கமல்ஹாசன் சாருக்காக மட்டுமே செய்தேன். நான் இன்று என்னவாக இருக்கிறேனோ என்னவெல்லாம் செய்கிறேனோ அதில் எல்லாவற்றிலும் கமல் சாரின் தாக்கம் இருக்கும். அவரிடமிருந்தே ஊக்கம் பெற்றேன். அவர் என்னை அழைத்து ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்ன போது அதை மறுத்துவிட நான் நினைக்கவில்லை. நீங்கள் எப்போது அச்சப்படுகிறீர்களோ அப்போது தான் நீங்கள் ஒரு பெரிய வெற்றிக்கு தயாராகுகிறீர்கள் என்று அர்த்தம். ரோலக்ஸ் பாத்திரத்தை நான் ஏற்றது கடைசி நிமிட முடிவுதான். நான் லோகேஷ் கனகராஜை அழைத்து நான் ரோலக்ஸ் கேரக்டரை செய்யவில்லை என்று சொல்லவே நினைத்தேன். ஆனால் கமல்ஹாசன் சாருக்காக மட்டுமே அந்த கதாபாத்திரத்தை ஏற்றேன்” என்றார்.