கங்குவா படத்தின் டீசரில் இடம்பெற்ற புலி கிராஃபிக்ஸ் இல்லை நிஜம் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. பாபி தியோல் , திஷா பதானி உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்தை இசையமைத்துள்ளார். கங்குவா படத்தின் டீசர் கடந்த மார்ச் 19 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
சிறுத்தை சிவாவை பாராட்டிய ரசிகர்கள்
சிறுத்தை சிவா இயக்கத்தில் விவேகம், அண்ணாத்த உள்ளிட்டப் படங்கள் தோல்வியை சந்தித்தன. இதனால் கங்குவா படத்தின் மேல் ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கவே செய்தது. பொதுவாக சரித்திர கதை என்றாலே தமிழில் அதில் கிராஃபிக்ஸ் காட்சிகள் எதிர்பார்த்த அளவு இருப்பதில்லை. 17 ஆம் நூற்றாண்டை கதைக்களமாகக் கொண்ட கங்குவா படத்தில் எக்கச்சக்கமான கிராஃபிக்ஸ் காட்சிகள் இருக்கும் இந்த கிராஃபிக்ஸ் காட்சிகளில் சிறுத்தை சிவா சொதப்பி விடுவாரோ என்கிற ஐயம் ரசிகர்களுக்கு இருந்தது.
கங்குவா படத்தின் டீசர் இந்த சந்தேகத்தை உடைத்தெறிந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பிரம்மாண்டமான காட்சிகள், அட்டகாசமான வி.எஃப்.எக்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகள் இந்தப் டீசரில் இடம்பெற்றன. இதனால் ரசிகர்கள் இயக்குநர் சிவாவை பாராட்டினார்கள். மேலும் படத்தின் மீதான அவர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. கங்குவா படத்தின் டீசர் பற்றி அதிர்ச்சியளிக்கும் உணமையைத் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன்
படத்தில் நிஜப் புலியை பயன்படுத்தி இருக்கிறோம்
கங்குவா டீசரில் சூர்யா புலியை எதிர்கொள்ளும் காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த காட்சியில் கிராஃபிக்ஸ் சிறப்பாக இருப்பதாக பாராட்டுகள் குவிந்தன. இந்த காட்சி முழுக்க கிராஃபிக்ஸ் இல்லை என்றும் படத்திற்காக நிஜப் புலி ஒன்று பயன்படுத்தப் பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். நிஜப் புலி ஒன்றை அதிகாரிகளின் ஒப்புதலோடு க்ளோஸ் அப் காட்சிகள் எடுத்து அதனை கிராஃபிக்ஸ் மூலம் பொருத்தியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தொழில் நுட்பம் ஏற்கனவே மோகன்லால் நடித்து வெளியான புலிமுருகன் படத்தில் பயன்படுத்தப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் தமிழில் வெளியாகும் படங்களில் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படுவது ஒரு சிறப்பான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.