தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. சுமார் 350 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.
ரிலீசானது கங்குவா:
இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து. சிங்கப்பூர். மலேசியா, தாய்லாந்து, என பல நாடுகளில் கங்குவா படம் வெளியாகியுள்ளது. சுமார் 14 ஆயிரம் திரையரங்கில் வெளியாகியுள்ள இந்த படத்தை காண்பதற்காக காலை முதலே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு நிகரான கதாபாத்திரத்தில் வில்லனாக உதிரன் என்ற கதாபாத்திரத்தில் பாபி தியோல் நடித்துள்ளார். அனிமல் படத்தில் வில்லனாக நடித்த இவரது நடிப்பிற்கு என்று ஏராளமான ரசிகர்கள் தென்னிந்தியாவில் உருவாகினர்.
பாபி தியோல் உதிரனாக மாறியது எப்படி?
இந்த நிலையில், கங்குவா படத்தில் பாபி தியோல் வந்தது எப்படி? என்பது குறித்து இயக்குனர் சிவா மனம் திறந்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் சிவா கூறியிருப்பதாவது, “ நான் சிறு வயதில் பாபி தியோலின் குப்த்,. சோல்ஜர் போன்ற அவரின் படங்களை பார்த்துள்ளேன். அவரது படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்.
நான் இன்ஸ்டாகிராமில் ஒரு சிறிய வீடியோ க்ளிப் பார்த்தேன். அவர் விமான நிலையத்தில் காரில் இருந்து இறங்கி வெளியே வருவார். அது என்னை மிகவும் கவர்ந்தது. அதுவே என்னை அவரை தேர்வு செய்ய வைத்தது. நான் என்னுடைய உதிரனுக்காக காத்திருந்தேன். அதை பாபி சார் இந்த படத்தில் செய்துள்ளார். உதிரன் இரக்கம் இல்லாத ஒருவன். அனிமல் படத்தில் மிருகமாக இருந்தவர். இந்த படத்தில் காட்டு மிருகமாக உள்ளார்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தென்னிந்தியாவில் தொடரும் பாபி தியோல் ஆதிக்கம்:
தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு வெளியாக உள்ள கங்குவா மற்ற மாநிலங்களில், வெளிநாடுகளில் அதிகாலையே வெளியாகிவிட்டது. கங்குவா படத்தை அங்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 55 வயதான பாபி தியோல் இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் ஆவார். 1995ம் ஆண்டு முதல் நடித்து வரும் பாபி தியோல் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
கங்குவா படம் மட்டுமின்றி தமிழில் விஜய் நடிக்கும் படத்திலும் பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார். மேலும், பவன் கல்யாண் மற்றும் பாலய்யா படத்திலும் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.