ஆர்.ஜே பாலாஜி


நடித்துள்ள படம் சொர்க்கவாசல். அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாதன் இந்த படத்தை இயக்கியுள்ளார். செல்வராகவன் , பாலாஜி சக்திவேல் , கருணாஸ் , நட்டி , சானியா ஐயப்பன் , அந்தோனி தாஸ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கிறிஸ்டோ ஸேவியர் படத்திற்கு இசையமைத்துள்ளார். எழுத்தாளர் தமிழ் பிரபா, சித்தார்த் விஸ்வநாத் , அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இணைந்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்கள். இப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. சொர்க்கவாசல் படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஆர்.ஜே பாலாஜி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகிறார். இத்துடன் அடுத்தபடியாக தான் இயக்கப்போகும் சூர்யா 45 படம் குறித்தும் அவர் பேசி வருகிறார்.


இந்தியன் 2 படத்தில் நடிக்காதது ஏன்


ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படத்தில் முன்னதாக ஆர்.ஜே பாலாஜி நடிக்க இருந்தார். பின் சில காரணங்களுக்காக இந்த படத்தில் இருந்து அவர் விலகினார்.இந்தியன் 2 படத்தின் கதையை எழுதும் போதே ஆர்.ஜே பாலாஜியை மனதில் வைத்து எழுதியதாக ஷங்கர் தெரிவித்திருந்தார். இந்தியன் 2 படத்தில் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து ஆர்.ஜே பாலாஜி வெளிப்படையாக பேசியுள்ளார். " 2015 ஆம் ஆண்டு இந்தியன் 2 துவங்கியபோது  படத்தில் நடிக்க வாய்ப்பு எனக்கு வந்தது. ஷங்கர் சார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. அதற்கு பின் அந்த படம் சில காரணங்களால் தாமதமானது. மறுபடியும் படப்பிடிப்பு தொடங்கியபோது நான் எல்.கே.ஜி படத்தை வெளியிட்டேன். கமல் , சித்தார்த் , எஸ்.ஜே.சூர்யா மாதிரி நடிகர்கள் இருக்கும் படத்தில் எனக்கு என்ன வேலை இருக்கும் என்று யோசித்தேன். லோகேஷ் கனகராஜ் , ஷங்கர் மாதிரியான இயக்குநர்களின் படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசைதான். ஆனால் மொத்தமே எனக்கு 7 நிமிட காட்சி தான் இருக்கும். எனக்கு அதெல்லாம் பண்ண வேண்டாம். சுந்தர் சி சொன்னது மாதிரி சிங்கத்திற்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இருந்திடலாம். நான் எலியாகவே இருந்துக்கிறேன். எனக்கு நான் தலையாக இருந்துக் கொள்கிறேன். இப்போது நான் நடித்திருக்கும் படத்திற்கு 20 கோடி செலவு பண்ணிருக்காங்க. என்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்கள் இருக்கும்போது நான் போய் 5 நிமிட காட்சியில் நடித்தால் அது நான் இந்த படத்திற்கு செய்யும் நியாயமாக இருக்காது" என அவர் தெரிவித்துள்ளார்