மகா காந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி விஜய் சேதுபதி தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் பிவி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.


வழக்கு விசாரணை:


அப்போது, சென்னை உயர்நீதிமன்றம் பிரிவு 500 ஐபிசி (கிரிமினல் அவதூறு) தவிர மற்ற அனைத்து குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்தது. சேதுபதி தனது சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்காக நல்லெண்ண அடிப்படையில் கருத்துகள் கூறப்பட்டதால், பிரிவு 499 ஐபிசி விதிவிலக்கு 9 இன் பலன்களைப் பெற அவருக்கு உரிமை உண்டு என்று விஜய் சேதுபதி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ”தனது மனுதாரர் ஒரு புகழ்பெற்ற நடிகர், எதிர்மனுதாரர் குடிபோதையில் இருந்தார். அவரது தரப்பில் இருந்து கீழ்த்தரமான நடத்தை இருந்தது” என்று எழுத்துப்பூர்வமான விளக்கத்தையும் தாக்கல் செய்தார்.


விஜய் சேதுபதிக்கு அறிவுறுத்தல்:

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், புகழ்பெற்ற நடிகராக இருப்பதால் விஜய் சேதுபதி கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், ”நீங்கள் ஒரு நடிகர், உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு.  அது மக்கள் மீது பதியும். பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஒரு நடிகராக இருந்தால், நீங்கள் அதிகப்படியான ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும். பொறுப்புள்ள நபராக  இருப்பின்,  நீங்கள் பெயரை வைத்து அழைக்கக் கூடாது” என நீதிபதிகள் கூறினர். (பேட்டி ஒன்றில் இந்த சம்பவம் குறித்து பேசும்போது, எதிர்மனுதாரரின் பெயரை விஜய் சேதுபதி குறிப்பிட்டு இருந்தார்.) தொடர்ந்து, இது சமரசம் செய்து கொள்ளக்கூடிய ஒரு விவகாரம் என கூறியது. அதோடு, “இது ஒரு கட்டத்திற்கு அப்பால் ஈகோவை விரிவுபடுத்த அனுமதிக்கப்பட வேண்டிய வழக்கு அல்ல. சுயமரியாதையைப் பேணுவதன் மூலம் இதை ஒரு அமைதியான முடிவுக்குக் கொண்டு செல்லலாம்” என பரிந்துரைத்தனர்.


மத்தியஸ்தம் மூலம் தீர்க்க பரிந்துரை:


இரண்டு தரப்புகளில் தவறு உள்ளது. இந்த விவகாரத்தில் இருந்து இருவரும் இன்னும் முழுமையாக விடுபடவில்லை.  ஆனாலும் இதை சமரசம் மூலம் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். தங்கள் தரப்பினரிடம் இதுகுறித்து கேட்டு உடனடியாக தெரிவியுங்கள் எனவும் வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து, இரண்டு தரப்பும் சமரசம் மூலம் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தனர். தொடர்ந்து, மார்ச் 2ம் தேதியன்று உச்சநீதிமன்ற மத்தியஸ்த குழுவில் இரண்டு தரப்பையும் ஆஜராக உத்தரவிட்டதோடு, இரு தரப்பு பிரச்சினையை தீர்த்துக்கொண்டு ஒன்றாக சேர்ந்து ஹோலியை கொண்டாடுங்கள் என நீதிபதிகள் வலியுறுத்தினர்.


வழக்கு விவரம்:


பெங்களூரு விமான நிலையத்தில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் தேதி நடிகர் விஜய் சேதுபதிக்கும் மற்றொரு நடிகரான மகா காந்தி என்பவருக்கும் இடையே நடந்த மோதல், திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.  ஆனால், விஜய் சேதுபதி தாக்கப்படவில்லை. அவரது உதவியாளர் ஜான்சனை, மகா காந்தி என்பவர் தாக்கியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, இரு தரப்புமே சமாதானமாகச் சென்றுவிட்டதால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகா காந்தி, மனுத்தாக்கல் செய்துள்ளார். அது ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, மகாகாந்தி உச்சநீதிமன்றத்தை அணுகினார். அந்த வழக்கை தான் சமரசம் மூலம் தீர்த்துக் கொள்ள, உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.