அமரன்
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியானது . சாய் பல்லவி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகியுள்ளது அமரன் திரைப்படம் .
சிவகார்த்திகேயன் கரியரில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக அமரன் படம் அமைந்துள்ளது. வெளியான முதல் நாளில் அமரன் படம் உலகளவில் ரூ 42.3 கோடி வசூலித்துள்ளது. முதல் வாரத்திற்குள் அமரன் படம் 100 கோடி வசூலை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமரன் படத்தை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
முன்னதாக அமரன் படத்தை பார்வையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் படக்குழுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் திரைத்துறையைச் சேர்ந்த பலர் அமரன் படத்தை பாராட்டி வருகிறார்கள். தற்போது அமரன் படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். படம் பார்த்து தனது நண்பர் கமல்ஹாசனுக்கு ஃபோன் செய்து ரஜினி பேசியுள்ளார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினரை நேரில் சந்தித்து ரஜினி பாராட்டுக்களை தெரிவித்தார்.
அமரன் கதை
இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் படைப்பிரிவில் இருந்த மேஜர் முகுந்த் தீவிரவாத கும்பலை பிடிக்கும் முயற்சியின்போது வீரமரணம் அடைந்தார். இந்திய அரசு அவருக்கு அசோக சக்கரா விருது வழங்கி கெளரவித்தது.
இவ்விருதினை முகுந்தின் மனைவி இந்து பெற்றுக்கொண்டார். ஒருபக்கம் முகுந்த் மற்றும் இந்துவின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை இன்னொரு பக்கம் ராணுவ வாழ்க்கை என இருபக்கத்தையும் படமாக சொல்கிறது அமரன் திரைப்படம். அமரன் படத்திற்கு ஒரு பக்கம் பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தாலும் இன்னொரு பக்கம் காஷ்மீர் பிரச்சனையை இப்படம் கையாண்டிருக்கும் விதம் குறித்த விமர்சனங்களையும் பலர் முன்வைத்து வருகிறார்கள் .