பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா(75)  திடீர் நெஞ்சுவலி காரணமாக இன்று காலை உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கானா பாடல்கள் மூலம் அறிமுகமான நிலையில் 450க்கும் மேற்பட்ட படங்களில் இவர் இசையமைத்துள்ளார். ரஜினி, அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். குறிப்பாக தேவாவின் மறைவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பேரழிப்பு என்றே கூறப்படுகிது. தேவா ரஜினிக்கு இசையமைத்த படங்கள் எல்லாம் ஹிட் பாடல்கள் தான். 

Continues below advertisement

ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ

குறிப்பாக அண்ணாமலை, பாஷா, அருணாச்சலம் படங்கள் அடங்கும். இந்நிலையில் தேவாவிற்கு அஞ்சலி செலுத்திய பிறகு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் படையப்பா படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்வது குறித்து தயக்கத்துடன் இருந்தததாகவும், அப்போது தேவா எந்தவித சங்கடமும் இல்லாமல் என் கையை பிடித்து தாராள மனதுடன் சந்தோஷமாக சொன்னார்.  உங்களது அண்ணாமலை, பாஷா, அருணாச்சலம் போன்ற மூன்று படங்களை இசையமைத்தது எனது பாக்கியம் என்றார். 

இதையும் படிங்க: Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”

Continues below advertisement

வஞ்சகம் இல்லாத சொக்கத்தங்கம்

எந்தவிதமான கள்ளம், கபடம், பொய் மற்றும் வஞ்சகம் இல்லாத சொக்கத்தங்கம். அவரது வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டார். அவருக்கு ஐந்து தம்பிகள். இவர் தான் மூத்தவர். ஆரம்ப காலத்தில் தெருத்தெருவாகவும் மற்றும் கல்யாணத்தில் கச்சேரி செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றிய உழைப்பாளி தேவா. திரையுலகத்தில் பெரிய இசையமைப்பாளரான பிறகும் தம்பிகளை விட்டு கொடுக்காமல் கூடவே வைத்திருந்தார்.

வெற்றி கண்டவர்

இசைஞானி இளையராஜா கொடிகட்டிப் பறந்த காலத்திலும், தனக்கென ஒரு தனித்துவமான பாதையை அமைத்து வெற்றி கண்டவர் தேவா. இரண்டரை வருடங்களுக்கு முன்னால், என்னிடம் வந்து ‘எல்லாரும் கச்சேரி பண்ணுறாங்க. நானும் பண்ணலாம்னு இருக்கேன். நேரு விளையாட்டு அரங்கத்துல, நீங்கதான் வந்து தொடங்கி வைக்கணும்’ அப்படினு கேட்டார். நான் சந்தோஷமா போய் அதுல கலந்துக்கிட்டேன்.

 ஆண்டவன் அழைத்துக்கொண்டான்

அதற்குப் பிறகு வெளிநாடுகளில் எல்லாம் அவர் கச்சேரி பண்ணினார். அவை எல்லாம் மிகப் பெரிய வெற்றியடைந்தன. ஒவ்வொரு வெளிநாட்டு சுற்றுப் பயணத்தையும் முடித்துவிட்டு என்னை வந்து தேவா சந்திப்பார். இப்போது சமீபத்தில் கனடா ஆஸ்திரேலியா போய் வந்து என்னை சந்தித்தார். அப்போது ‘ரொம்ப சந்தோஷமா இருக்கு... ஆச்சரியமா இருக்கு. இளைஞர்கள் அந்த அளவுக்கு வரவேற்கிறாங்க.  இந்த சந்தோஷத்துடன் பத்து பதினஞ்சு வருஷம் சந்தோஷம் வாழ்ந்துருவேன்’னு என்னிடம் சொன்னார். தேவா மகிழ்ச்சியாக இருக்கும்போதே ஆண்டவன் அவரை அழைத்துக்கொண்டான் என்று ரஜினிகாந்த் உருக்கமாகத் தெரிவித்தார்.