இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சுதந்திர தின கொண்டாட்டமாக கடந்த 14ம் தேதி வெளியான படம் கூலி.

கூலி:

ரஜினிகாந்துடன் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் அமீர்கான் கேமியோவுடன் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது இந்த படம். படத்திற்கு கலவையான விமர்சனம் இருந்தாலும், வசூல் குறைவில்லாமல் வந்து கொண்டிருக்கிறது.

2வது நாள் வசூல் எவ்வளவு?

உலகளவில் கூலி படம் முதல் நாள் மட்டும் ரூபாய் 151 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், இரண்டாவது நாளான நேற்று கூலி படம் ரூபாய் 53.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் மட்டும் கூலி படம் முதல் நாளில் ரூபாய் 65 கோடி வசூல் செய்தது. முதல் நாளில் தமிழில் மட்டும் ரூபாய் 44.5 கோடி வசூல் செய்தது. தெலுங்கில் ரூபாய் 15.5 கோடியும், கன்னடத்தில் ரூபாய் 50 லட்சமும், இந்தியில் 4.5 கோடி ரூபாயும் முதல் நாளில் வசூல் செய்தது. இந்த நிலையில், இரண்டாவது நாள் வசூலான ரூபாய் 53.50 கோடியையும் சேர்த்து மொத்தமாக ரூபாய் 118.50 கோடியை கூலி படம் இந்திய அளவில் இரண்டு நாட்களில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அரங்கம் நிறைந்த காட்சிகள்:

இரண்டாவது நாளான நேற்று காலை காட்சிக்கு 63.86 சதவீதமும், மதிய காட்சிக்கு 86.25 சதவீதமும், மாலை காட்சிக்கு 86.37 சதவீதமும், இரவுக்காட்சிக்கு 86.33 சதவீதமும் அரங்குகளில் இருக்கைகள் நிறைந்து இருந்தது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்றும், நாளையும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காட்சிக்கு தமிழ்நாட்டின் பல திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்பனை ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டது. கூலி படத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் டிக்கெட்டுகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. 

படுஜோராக நடக்கும் டிக்கெட் விற்பனை:

இரண்டாம் நாளான நேற்றும் ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் டிக்கெட் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. படத்தில் நாகர்ஜுனா நடித்திருப்பதால் அங்கு இந்தளவு டிக்கெட் விற்பனை இந்தளவு நடந்து வருகிறது. கூலி படத்திற்கு போட்டியாக ஹ்ரித்திக் ரோஷன் - ஜுனியர் என்டிஆர் இணைந்து நடித்த வார் 2 படம் வெளியானது. 

பாலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படத்திற்கு இணையாக கூலி படமும் திரையரங்கில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என வெளிநாடுகளிலும் வெளியான கூலி படத்திற்கு அங்கு வாழும் ரஜினி ரசிகர்களும் தீவிர வரவேற்பு அளித்துள்ளனர்.